யாழ் பருத்தித்துறையில் குடும்பஸ்தர் திடீர் மரணம்

235 0

பருத்தித்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பார் என்ற சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை திருநாவலூர் பகுதியில் வசித்து வந்த நபரே மேற்படி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அண்மையில் கொழும்பில் இருந்து திரும்பியுள்ளார் என்றும், அவருடன் தொடர்புபட்ட ஒருவருக்கு கொழும்பில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது

இதையடுத்து கொழும்பில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து திருநாவலூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருப்பினும் அவரும் தாய் தந்தையரும் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மகளின் தந்தை உயிரிழந்துள்ளார் எனவும் கொரோனா தொற்றுப் பாதிப்பினாலேயே உயிரிழந்தார் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது கொரோனாத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரின் மனைவி பரு/ மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணி புரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த முதியவர் நீண்ட நாட்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும், பருத்துறையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நேற்றைய தினம் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

பருத்தித்துறைக்கு கொழும்பிலிருந்து வருகைதந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடைய குடும்பத்தினர் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் ஓடக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.