தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 – லண்டன்

277 0

இவ்வாண்டு பூகோளம் எங்கும் கோவிட் 19 தாக்கம் வீரியம் கண்டு நிற்கும் காலத்தில் எம் புனித மறவர்கள் வாழ்ந்த தேசத்தில் உலக மனிதவியலுக்கும் மாண்பியலுக்கும் மாறாக எம் மறவர்களை நினைவேந்த இலங்கை அரசு தடைவிதித்து நிற்கின்ற இந்தக் காலப்பகுதியில், நாம் வாழும் நாடுகளில் சுகாதார மற்றும் சட்டவிதிகளுக்கு அமைவாக மாவீரர் நாளைப் பேரெழுச்சியுடன் நினைவுகூறும் செயற்திட்டத்தை, அனைத்துலக கட்டமைப்பின் வழிகாட்டலை உள்வாங்கி மிகப் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்து எம் அன்புக்குரிய மக்களாகிய உங்களின் பேராதரவுடன் கூடிய தேசிய உணர்வோடு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா, பிரித்தானியக் கிளையின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது தமிழ் தேசிய தொலைக்காட்சியில் TTN மற்றும் சமூக இணையவழி ஊடாக நேரலையாக உங்களை அனைவரையும் இணைத்து முன்னெடுக்கப்பட்டது .

தமிழீழ தேச உணர்வுகள் கருக்கொண்டு, கழுத்தில் நஞ்சணிந்து தாயக விடுதலையை நெஞ்சில் சுமந்து, வரி அணிந்து தரை, கடல், வான் என ஆக்கிரமிப்பின் நிலம் தேடியும் பகை அழித்து விழிமூடிக் கல்லறையில் துயில்கின்றவரை வணங்கி மானமறவர்களால் பலம் பெற்று தீரமுடன் போராடி ஈழ தேசமதை மீட்ப்போம் என்ற உறுதி ஏற்பிற்காய் உலகமெங்கும் வாழும் தமிழர்களை உணர்வுப் பிரவாகத்துடன் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் இணையவழி ஊடாக நேரலையாக இணைத்திருந்தார்கள் .

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 ம் ஆண்டின் தொடக்க நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றல் பொதுச்சுடரினை 11.12.2001 ல் மூதூர் மாந்தோப்பு இராணுவ முகாம் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியாவின் செயற்பாட்டாளருமான கமல் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

பிரித்தானிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பை சார்ந்த செல்வி பாப்ரா ஏற்றி வைத்தார்கள். விடியப்போகும் தமிழீழத்தின் வீரியமாய் எம் மாவீரர் நினைவோடு தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியாவின் நீண்டகால செயற்பாட்டாளரான திரு நியூட்டன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

தொடர்ந்து தலைவனின் வழிகாட்டலில் தம் தடம் பதித்த மாவீரர்களுக்கான கொடிவணக்கம் இடம்பெற்றது .

எங்கள் தமிழீழ தேசிய தலைவரின் வரலாற்று வரிகள், எங்கள் தேசத்திற்கான உரிமைக்கான குரல் விடுதலைக்கான கொள்கைப் பிரகடனம். இந்த வரலாற்றின் இசைவிற்காக தமிழீழ தேசிய தலைவரின் 2008 ம் ஆண்டு மாவீரர் உரை ஒலி மற்றும் ஒளி வடிவத்தில் காண்பிக்கப்பட்டது. இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அகவணக்கத்தினை தொடர்ந்து காவல் தெய்வங்களை, மாவீரச்செம்மல்களை நெஞ்சில் நிறுத்தி 12:37 மணித்துளிகளில் துயிலுமில்லப் பாடல் ஒலிக்க, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 ம் ஆண்டிற்கான இவ்வுன்னதமான முதன்மை சுடரினை 08.07.2003 ல் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட மாவீரர் லெப் கேணல் நிர்மலராஜ் அவர்களின் துணைவியார் திருமதி நிர்மலராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

தொடர்ந்து எங்கள் தேசத்தில் பூத்து குலுங்குகின்ற காந்தள் மலர் கொண்டு மாவீரர்களுக்கான மலர் வணக்கம், சுடர் வணக்கம் இடம்பெற்றது .

மாவீரர் நாள் நிகழ்வுகளாக தமிழர் ஒருங்கிணைப்பு குழு அறிக்கை , தமிழர் இளையோர் அமைப்பு உரைஇணை தொடர்ந்து இக்கட்டான காலகட்டத்திலும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதிவினை தமிழ் மக்களுக்காக வழங்கி இருந்தார்கள் .

தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலோடு தீசிய கொடிகள் கையேந்தப்பட்டு தொடர்ந்து மாவீரர்கள் கனவு நனவாகும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது .

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 – லண்டன் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா (tccuk.org)