கனடிய பாதுகாப்புப் படையின் உயர் மதிப்புறு விருது பெற்ற ஈழத்தமிழ் மகன்

327 0

னேடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் கூடிய பணியை ஆற்றியமைக்காக உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்னும் சிறப்பு விருதினை பெற்றுக் கொண்ட ஈழத்தமிழ் மகன் வாகீசன் மதியாபரணம் அவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.

அண்மையில் கனடாவின் தலைநகரான ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள கனடிய பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் இடம்பெற்ற படை நிகழ்வொன்றில் தனது சிரேஸ்ட படைத் தளபதியிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொண்ட ஈழத்தமிழ் மகனும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி செதுக்கிய மாணவச் செம்மல் வாகீசன் மதியாபரணம் அவர்களை எமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதிலும் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இவ்வாறான கனடிய அரச சார்ந்த கௌரவத்தைப் பெற்ற வாகீசன் மதியாபரணம்  கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஒரு சிரேஷ்ட நிதியியல் சேவைகள் நிர்வாகியாக தற்போது பணியாற்றி வருகின்றார் என்பதும் பெருமைக்குரிய ஒரு விடயமாகும்.

சாதனையாளர் வாகீசன் மதியாபரணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருவாக்கிய மாணவச் செல்வங்களில் சிறப்புகள் நிறைந்த ஒருவராகவும் விளங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற 1983 தொடக்கம் 1988 வரையிலான காலப்பகுதியில் ஒரு முக்கியமான மாணவராக விளங்கியுள்ளார்.

1986 தொடக்கம் 1988 வரை அவர் கல்லூரியின் மாணவத் தலைவராக விளங்கியுள்ளார். அத்துடன் கல்லூரியின் உதைபந்தாட்டக் அணியின் மூன்று பிரிவுகளிலும் அங்கம் வகித்து பல போட்டிகளில் வெற்றிகளை ஈட்டுவதற்கு காரணமாக இருந்துள்ளார். அத்துடன் யாழ். இந்துக் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியிலும் பங்கெடுத்துள்ளார். 1987ல் கல்லூரியின் வர்த்தக மன்றத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார். அத்துடன் சாரணர் அணியையும் அலங்கரித்துள்ளார்.

பின்னர் 1988ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்த வாகீசன், கனடிய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பட்டம் பெற்று 1995ஆம் ஆண்டு கனடிய இராணுவத்தில் இணைந்து கொண்டார். அதன் தொடர்ச்சியான காலப் பகுதியில் கனடாவின் பாதுகாப்புப் படையின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையிலும் நேட்டோ நாடுகளின் சமாதானப் படையிலும் பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டார்.

2003ஆம் ஆண்டளவில் ரொரென்ரோவில் அமைந்துள்ள பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில் இங்குள்ள தமிழ்ச் சமூகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு பல சமூகப் பணிகளை ஆற்றத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் தமிழர் சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக TVI/CMR ஆகிய தமிழ் ஊடக நிறுவனங்களில் தொண்டராக இணைந்து கொண்டார். அப்போது மேலும் ஆர்வம் காரணமாக குறுகிய கால விடுமுறையை எடுத்துக் கொண்டு முழு நேரமாக மேற்படி TVI/CMR ஊடகங்களின் வளர்ச்சிக்காக உழைத்தார்.

குறிப்பாக, மேற்படி ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டமிடல் இயக்குனராக 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரை பணியாற்றிய பின்னர் மீண்டும் கனடிய பாதுகாப்புப் படையில் இணைந்து கொண்டார்.

கனடாவில் மிகவும் பொறுப்புகள் நிறைந்த பதவிகளில் அமர்ந்திருந்தாலும் தான் கல்வி கற்று தன்னை உயர்ந்த ஓர் இடத்தில் அமர்த்தியிருக்கின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கனடாவில் இயங்கும் அதன் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து அந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் தமது தாய்க் கல்லூரியின் உயர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டார்.

தொடர்ந்து யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடா பழைய மாணவர் சங்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டுவருகின்றார். மேலும் இவர் எமது தாயகத்தில் பொருளாதார கஷ்டங்களால் தமது கல்வியை சிறந்த முறையில் தொடர முடியாமல் உள்ள தமிழ் மாணவர்களின் நலன் கருதி, ‘தமிழ் மாணவர்கள் உதவித் திட்டம்’ (Tamil Students Assistance) என்னும் அமைப்பை சில நண்பர்களோடு இணைந்து ஆரம்பித்து தொடர்ந்து இந்த நற்பணியை ஆற்றி வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாகீசன் தற்போது தனது குடும்பத்தினரோடு வசித்து வருகின்ற ஒட்டாவா மாநகரில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் இணைந்து, அங்கும் பல சமூக மற்றும் சமயப் பணிகளை ஆற்றி வருகின்றார்