வாகை மரங்கள் ஏங்குகின்றது !-தலைநகர் தந்த கவி

374 0
மாவீரத் தெய்வங்களே !
  உங்கள் தியாகத் திருநாளாம்
  மாவீரர் திருநாளை நோக்கி
  காத்திருக்கின்றோம் !
 வாகை! வாகை ! என்று
 நீங்கள் ஆர்ப்பரிக்கும்
 உங்கள்   திருவாயில்
 ஓங்கி ஒலிக்கும்
 தேசிய மரங்கள் நாம் …
இந்த தெய்வீக வேளையில்
நாங்கள் …பூத்துக் குலுங்கி
செழித்து நிற்கின்றோம் …
எங்கள் பூக்களின் விழிகள்
உங்களைத் தேடுகின்றது …
எங்கள் கிளைகள்
உஙகளை அணைக்கத் துடிக்கின்றது …
நீங்கள் களமாடிய போதெல்லாம்
பூரித்து நின்ற எங்கள் அடிவேர்கள்
உங்கள் காலடிச் சத்தம் கேட்காமல்
மௌனத்தில் ஆழ்ந்துள்ளது …
 நீங்கள் வெற்றி வாகை
 சூடிய போதெல்லாம்
 எங்கள் திருப்பெயரை
 தமிழீழம் உச்சரிக்குமே !
 மூவேந்தர் நெஞ்சினில் வீற்றிருந்தோம் !
 உங்கள் நெஞ்சினில்
 வீற்றிருக்கும் போதெல்லவா
 புறநாநூற்றை விஞ்சிய வீரத்தை உணர்தோம் !
விழுப்புண்களுக்கு மருந்தாகவும்
வெற்றிவாகைக்கு மாலைகளாகவும்
அல்லவா நாம் இருந்தோம் …
நம்  தேசியத் தலைவன் அல்லவா
எங்களை தேசிய மரங்களாக்கி மதிப்பளித்தான் !
தமிழீழமெங்கும் பரந்து நிற்கும்
காவல் தெய்வங்களே !
உங்களை நினைக்கின்றோம்
உங்கள் நினைவுகளில் ஆழ்கின்றோம் …
 பலநூறு விழுப்புண்களை தாங்கி
 களமாடிக்   களமாடி !
 வீறுகொண்டு நின்றீர் !
 சீறிப்பாய்ந்த சன்னங்களும் !
 இடிமுழங்கிய குண்டுகளும் !
 எம் மண்ணை கந்தகத்
 தீயாக்கிய நேரம் …
 குறிதப்பாமல் பாயும்
 புலியெனவே பாய்ந்தீர்க்கள் !
 தீகக்கும் பெருநெருப்பில்
 பகைத்தன்னைச் சாய்த்தீர்கள் !
 உயிரும் உடலும் கடந்து
 மனத்தீயாய் பகைவர்
 களம் புகுந்தீர்கள்  !
உயிரும் உடலும் பிரிந்து
மாவீரர் வடிவாகி
பரந்து விரிந்தீர்கள்  !
  மாவீரர்களே !
  எங்கள் தேகமெல்லாம் விழுப்புண்கள் !
  உங்கள் வீரகாவியங்களை தாங்கிய
  அடையாளாச் சின்னமாக
  இன்னும் உயிர்ப்புடன் நிற்கின்றோம் …
நாங்கள் தமிழீழப்போரின் சாட்சிகள் !
உலகம் எம்மொழியைப் புரியும் காலம் வரும் …
நாம் இனஅழிப்பின் சாட்சிகளாக வருவோம் …
மாவீரர்களே !
உங்கள் தாள் பணிந்து வணங்குகிறோம் .
தலைநகர் தந்த கவி.