மேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது – GMOA

268 0

மேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினது செயலாளர் வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா தொற்றுத் தொடர்பான முழுமையான தகவல்களையும் வழங்க வேண்டும்.

இல்லையெனில் மேல்மாகாணத்தில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்ற எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.

மேல் மாகாணம் மிகவும் ஆபத்தான பகுதியாக இருப்பதால், கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான தரவுகள் உடனடியாகச் சேகரிக்கப்பட வேண்டும்.

மேல் மாகாணத்திற்கென விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்றாளர்கள் குறித்த தனிப்பட்ட விபரங்களும் தாமதமின்றிச் சேகரிக்கப்பட வேண்டும்.

இது நோயாளர்களுக்கான சிகிச்சைகளை தாமதமின்றி வழங்குவதற்கு வழி ஏற்படுத்துவதுடன், புதிய தொற்றாளர்களை உடனடியாக அறிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.

இதுவரை கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான எந்தவொரு தரவுகளும் மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் சேகரிக்கப்படவில்லை. இது மேலும் ஆபத்தான நிலைமைக்கே வழிவகுக்கும்“ எனத் தெரிவித்துள்ளார்.