தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்கள்

31 0

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கியது.

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி, மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

அடுத்த மாதம் 12 மற்றும் 13 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 3,754 வாக்குசாவடிகள் அடங்கிய 902 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதன்படி பொதுமக்கள் முகாம் நடக்கும் இடங்களுக்கு சென்று தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என அறிந்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், அங்கேயே விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விரும்புவோர், முகவரி சான்றாக, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கி புத்தகம், கிசான் பத்திரம், தபால் அலுவலக கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, வருமான வரி ஒப்படைப்பு சான்று, வாடகை ஒப்பந்தம், குடிநீர், தொலைபேசி, மின் கட்டணம், காஸ் இணைப்பு ரசீது, சமீபத்தில் வந்த தபால் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை வழங்கலாம். மேலும், பிறப்பு சான்றிதழ், ஐந்து, எட்டு, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை, பிறந்த தேதி ஆவணமாக அளிக்கலாம். வரும், 2021 ஜனவரியில் 18 வயது பூர்த்தியாவோரும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்து வரும் ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.