தமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு

466 0

காலங்கள் போகலாம். சந்தர்ப்பங்கள் மாறலாம். ஆனால் தமிழர்களின் தாகமும்,  விவேகமும், எண்ணமும் ஒரு போதும் மாறாது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், மன்னாரில் மாவீரர் தினம் நினைவு கூற தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (23 ஆம் திகதி) மேன் முறையீடு செய்ய இருக்கின்றோம். அந்த மேன் முறையீட்டின் ஊடாக தடையை நீக்கி 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை நடத்த அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் போராட்டத்தில் மரணித்த வீர மறவர்களுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெற இருந்த  சூழ்நிலையில், நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக யுத்தத்திற்கு பின்னர் மிகவும் சிறப்பாக மாவீரர் தின நிகழ்வு நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்று வந்தது.

மாவீரர்களின் உறவுகள் உணர்வு பூர்வமாக தமது பிள்ளைகளுக்காக அஞ்சலி செலுத்துகின்ற ஒரு நிகழ்வாக அவர்களின் ஆத்மார்த்தமான கண்ணீரை சிந்துவதற்கான ஒரு நாளாக நவம்பர் 27 இருந்து வந்தது.

பல ஆயிரக்கணக்கான வீரர்கள் இலட்சியத்திற்காக மடிந்த இந்த தேசத்தில் அவர்களுடைய கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

நிலைமாறுகால நீதிக்கு பின் மாறலி கொள்கை தத்துவத்தின் பிரகாரம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கின்ற சர்வதேச நியம முறைகளுக்கு அப்பால் இவ்வருடம் நீதிமன்றங்கள் ஊடாக தடை பெற்றுள்ளது.

பொலிஸார் நீதிமன்றத்தை தவறான முறையிலே தொடர்ச்சியாகவே உபயோகித்து வருகின்றனர். மாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்களுக்கு எல்லாம் தடை உத்தரவு பெற்றிருக்கின்றார்கள்.

கோயிலில் கஞ்சி காய்ச்ச ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அருட்தந்தை ஒருவர் உட்பட ஐவருக்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.

என்னைத் தவிர ஏனைய நான்கு பேரும் மாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்கள். நீதிமன்றத்தின் நேரத்தையும், நீதிமன்றத்தையும் இந்த பொலிஸார் தவறான வழிகாட்டுதல் செய்கின்றனர்.

அவர்களின் புலனாய்வுத்துறை ஆளுமை இல்லாதவர்களாகவும், உண்மையை கண்டு பிடிக்க முடியாதவர்களாகவும் இந்த அரச புலனாய்வுத்துறை இயங்குகின்ற காரணத்தினால் தான், இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கும் நீதியும் குற்றத்தை கண்டு பிடிக்கின்ற தன்மைகளும் குறைவாக காணப்படுகின்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கும் இவ்வாறுதான் சம்மந்தம் இல்லாதவர்களுக்கு தடை உத்தரவு வழங்கினார்கள்.

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கிராம அலுவலகர் மரணத்தினுடைய உண்மைத்தன்மையைக் கூட வெளிப்படுத்த பொலிஸார் திறானியற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

பொலிஸாரின் செயற்பாட்டை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம். நல்லெண்ணத்தை ஏற்படுத்துகின்ற விடயத்திற்கு மாறாக இனங்களுக்கு இடையில் குரோதத்தையும் முரண்பாட்டையும் ஏற்படுத்தவதற்கு வழி வகுப்பதற்கு பொலிஸார் இவ்வாறான விடயங்களில் ஈடுபடுகின்றார்கள்.

தமிழ் மக்களின் உணர்வோடு சம்மந்தப்பட்ட விடயம். இலட்சியத்திற்காக விடுதலை நோக்கோடு உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு நிகழ்வை தடுப்பது என்பது தொடர்ச்சியாக வடக்கு- கிழக்கிற்கு மாறான ஒரு நிலைப்பாட்டில் தெற்கினுடைய பௌத்த தேசிய வாதத்தை நிலை நாட்டும் நோக்குடன் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், காலங்கள் போகலாம். சந்தர்ப்பங்கள் மாறலாம். ஆனால் தமிழர்களின் தாகமும், விவேகமும், எண்ணமும் ஒரு போதும் மாறாது. மாறவும் முடியாது என்பதனை எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலமைகள் தேற்றம் பெறும்.

எனவே நீதிமன்றத் தடைக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதி, மேன்முறையீடு செய்ய இருக்கின்றோம். அந்த மேன் முறையீட்டின் ஊடாக தடையை நீக்கி 27ஆம் திகதி மாவீரர் தினத்தை நடத்த அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.