நினைவேந்தலைத் தடுப்பதற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு

30 0

மாவீரர் நாளை நினைவு கூரப் பிறப்பிக்கப்படும் தடை உத்தரவை இரத்து செய்து, நினைவேந்தலை மேற்கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரும் தடையீட்டு ஆணையை விசாரிக்கும் அதிகாரம் மாகாண மேல் நீதிமன்றிற்குக் கிடையாது எனக் கூறி அது தொடர்பான மனுக்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெறும் மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்யக் கூடாது என உத்தரவிடக்கோரி மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகள் இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் இருவழக்குகள் தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்றது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்றில் சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகளும், பிறிதொன்றில் வி.மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகளும் முன்னிலையான அதேநேரம் எதிராளிகளான அரசுத் தரப்பில் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுமதி தர்மரட்ண உள்ளிட்டோர் ஆஜராகினர்.

வழக்குக்குக்குரிய விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்பு படுகின்றது, அரசமைப்பின் பிரகாரம் தேசிய பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்திற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியதும், பயங்கவாத செயல்பாட்டை தூண்டும் இந்த விடயம் தொடர்பில் ஆணையிடும் நியாயாதிக்கம் மாகாண மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என அரச தரப்பில் பூர்வாங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு பொதுவான நினைவேந்தலையே சுட்டி நிற்கின்றதோடு அது தேசிய பாதுகாப்புடன் தொடர்பு படக்கூடியது என மன்று ஏற்கின்றது. அதன் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு கருதிய விடயத்தில் கட்டளையாக்கும் அதிகாரம் மாகாண மேல் நீதிமன்றிற்கு இல்லாத காரணத்தால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதி தீர்ப்பளித்தார்.