கடற்கரையில் 100 மணல் ரதங்கள்

30647 0

201607050905055802_sand-artist-Sudarsan-Pattnaik--created-100-sand-Rathas-at_SECVPF16-ம் நூற்றாண்டு காலத்தில் ஒடிசா மாநிலத்தில் வாழ்ந்தவர் பல்ராம் தாஸ். பிரபல கவிஞரும் சுவாமி ஜகன்நாதரின் தீவிர பக்தருமான இவரை அந்நாளின் சைவ ஆட்சியாளர்கள் தொடர்ந்து அவமரியாதை செய்து வந்தனர்.  சுவாமி ஜகன்நாதர் ஆலய திருவிழாக்களின்போது நடைபெறும் தேர்திருவிழாவில் வைணவரான பல்ராம் தாஸ் பங்கேற்று தேரின் வடத்தை இழுக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனம்வெறுத்துப் போன பல்ராம் தாஸ், இங்குள்ள பூரி கடற்கரைக்கு சென்று ஜகன்நாதர் ஆலயத்தில் உள்ள தேரைப் போலவே மணலால் பல்வேறு தேர்களை உருவாக்கினார். இதைப்பற்றி கேள்விப்பட்ட அந்நாள் மன்னர் கடற்கரைக்கு ஓடிவந்து பல்ராம் தாசிடம் மன்னிப்பு கேட்டார்.

சுவாமி ஜகன்நாதர் மீது பல்ராம் தாஸ் கொண்டிருந்த பக்தி இவ்வாறிருக்க.., 16-ம் நூற்றாண்டு வாக்கில் பல்ராம் தாசால் உருவாக்கப்பட்ட மணல்சிற்பக் கலையை உலகம் முழுவதும் பரப்புவதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதுடன், 20 உலக சாதனைகளை படைத்துள்ள பிரபல மணல்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தற்போது மேலும் ஓர் உலக சாதனை படைத்துள்ளார்.

இவரது மணல்சிற்பக் கலைக்கூடத்தை சேர்ந்த 25 மாணவர்கள் உதவியுடன் 800 மூட்டை மணலைக் கொண்டு, மூன்று நாட்களில் 20 மணிநேரம் வேலைசெய்து, பூரியில் உள்ள கடற்கரையில் ஜகன்நாதர் ஆலயத்தில் உள்ள தேரைப் போலவே நூறு மணல் தேர்களை இவர் உருவாக்கியுள்ளார்.

இந்த படைப்பும் ஓர் உலக சாதனையாக அங்கீகரிக்கப்படும் என பத்மஸ்ரீ விருதுபெற்ற சுதர்சன் பட்நாயக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் சுதர்சன் பட்நாயக்கின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூறு மணல் தேர்களும் பக்தர்களை பிரமிக்க வைக்கும் என நம்பலாம்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.

கடந்த மே மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மணல் சிற்ப போட்டியில் பங்கேற்று முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த சுதர்சன் பட்நாயக்கை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜுன் மாதம்பல்கேரியா நாட்டின் தலைநகரான சோபியாவில் ‘விளையாட்டு உலகமும், ஒலிம்பிக் சின்னமும்’ என்ற மணல் சிற்ப ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் உலகநாடுகளை சேர்ந்த மிகவும் பிரபலமான பத்து மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட லேன்ஸ் ஆர்ம்ஸ்டிராங் மற்றும் மரியா ஷரபோவா ஆகியோரின் முகங்களை ஓவியமாக வரைந்திருந்த சுதர்சன் பட்நாயக்கின் படைப்பு பார்வையாளர்களால் சிறந்த மணல் சிற்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

‘போதைப் பழக்கம் விளையாட்டை கொன்றுவிடும்’ என்ற கருத்தை தனது சிற்பத்தின்மூலம் வெளிப்படுத்தியதற்காக இந்த போட்டியின் முதல் பரிசான தங்கப்பதக்கத்தை சுதர்சன் பட்நாயக் வென்றார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளதும், இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment