கொழும்பு துறைமுகத்தில் கொரோனா பரவலால் நெருக்கடி- அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து

244 0

கொழும்பு துறைமுக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அத்தியாவசிய பொருட்களிற்கு தட்;டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்தான நிலை உருவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான போதிய ஊழியர்கள் தொழிலாளர்கள் இல்லாததன் காரணமாக உள்ளுர் சந்தைக்கு நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதில் நெருக்கடியேற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதுவரையில் 40 கப்பல்கள் கொழும்புதுறைமுகத்தில் பொருட்களை இறக்காமல் சென்றுள்ளன.
இது அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்களின் கையிருப்புகள் முடிவடைவதற்குள் கொள்கலன்கள் கிடைக்கப்போவதில்லை என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி சங்கத்தின் தலைவர் எஸ் இராஜேந்திரன் கொள்கலன்களை இறக்குமதி மேலும் தாமமானால் அத்தியாவசிய உணவுப்பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கொள்கலன்களை இறக்காமல் சென்ற கப்பல்கள் இன்னொரு நாட்டின் துறைமுகத்தில் அவற்றை இறக்கப்போகின்றன இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் அவற்றை தனது நாட்டிற்கு அங்கிருந்து கொண்டுவரவேண்டியுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்புதுறைமுகத்தில் காணப்படும் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வை காணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.