“கொரோனா காலப்பகுதியில் இள வயது நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது” என்று யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் சிவமகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“கொவிட்-19 போன்ற தொற்று நோய்களும் இன்று அதிகரித்துள்ள நிலையில் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களும் பெருகி வருகின்றன. மேலைத்தேய நாடுகளில் இருந்த நீரிழிவு நோய் இப்போது இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலும் பெருகி வருகிறது. இலங்கையில் 80 களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஏறக்குறைய 3 சதவீதமானவர்களுக்கே நீரிழிவு நோய் இருந்தது.
அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 30 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 – 20 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்கு எங்கள் வாழ்க்கை நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களே முக்கிய காரணம். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், அதிகரித்த மன அழுத்தம், அப்பியாச உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறைகளால்தான் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் வருகின்றன.
கொவிட்-19 பரவி வரும் கடந்த ஆறு மாத காலத்தில் அதிகளவு இளைஞர், யுவதிகளுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 20 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்ட இளம் சமுதாயத்தினரிடையே நீரிழிவு நோய் பெருகி வருகின்றது. ஆகவே, அனைவரும் இந்த நீரிழிவு மாதத்தில் நீரிழிவு நோய் உண்டா, இல்லையா என்பதைக் கண்டறிவது அவசியம்.
பாடசாலை மாணவர்களிடையேயும் நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது. முன்னைய காலங்களில் சிறுவர்களுக்கு வகை -1 எனப்படும் இன்சுலின் சுரப்பி பிரச்சினை இருந்தது.
ஆனால், இன்று எத்தனையோ பேருக்கு வகை -2 எனப்படும் வளர்ந்தவருக்கு ஏற்படுகின்ற நீரிழிவு நோயும் இருக்கின்றது. இதற்கு உடற்பருமனும், இலத்திரனியல் உபகாரணங்களுக்கு அடிமையாகி எந்தவொரு விளையாட்டுகளிலும் ஈடுபடாமல் இருப்பதுமே காரணம்.
ஆகவே பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து சிறார்களுக்கு ஏற்படும் நீரிழிவு அபாயத்தை முற்கூட்டியே தடுப்பது அவசியமாகும்.

