சிறிலங்கா பிரதமர் பொத்துவில் முஹுது மகா விகாரைக்கு கண்காணிப்பு விஜயம்

308 0

அம்பாறை, பொத்துவில்லில் அமைந்துள்ள முஹுது மகா விகாரைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2020.11.11) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.


விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மஹாசங்கத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க முஹுது மகா விகாரையின் விகாராதிபதி, கிழக்கு மாகாணத்தின் பிரதான சங்கநாயக்கர் வரகாபொல இந்தசிறி தேரர், அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராமாதிபதி தேவகொட சோரத தேரர், பௌத்தயா அலைவரிசையின் தலைவர் பொரளந்தே வஜிரஞான தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தனர்.


மஹாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமரை ஆசிர்வதித்தனர்.தொடர்ந்து
முஹுது மகா விகாரையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதமர் விகாரையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விகாரைக்குச் சொந்தமான இடம் சட்டவிரோதக் குடியிருப்பாளர்களின் பிடியிலுள்ளமை தொடர்பில் கடந்த அரசாங்க காலப்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

அப்பிரச்சினையைத் தீர்த்து, முஹுது மகா விகாரைக்குச் சொந்தமான காணியை அடையாளமிட்டு, அதனை புனித பூமியாக பெயரிட்டு அதற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு பிரதமரும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனக்கு அறிவுறுத்தியதாக குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தப் பூமியைப் பாதுகாக்கும் பொருட்டு பிரதமரின் தலையீட்டுடன் கடற்படை துணைக்குழுவொன்றை நிறுவுவதற்கு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க முஹுது மகா விகாரைக்குச் சொந்தமான 72 ஏக்கர் நிலப்பரப்பை பாதுகாத்து தருமாறும், கிழக்கு மாகாணத்தில் அடையாளப் படுத்தப்படாத தொல்பொருள் பிரதேசங்களைப் பாதுகாத்து தருமாறும், முஹுது மகா விகாரையின் விகாராதிபதி, கிழக்கு மாகாணத்தின் பிரதான சங்கநாயக்கர், வரகாபொல வண .இந்தசிறி தேரர்  பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் தலைமையில் 2003ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முஹுது மகா விகாரையின் தாதுகோபுர நிர்மாணப் பணிகள் இதுவரை நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக விகாராதிபதி வரகாபொல இந்தசிறி தேரர் பிரதமரிடம் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டப்ளிவ்.டீ.வீரசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஆனந்த பீரிஸ், அம்பாறை மாவட்ட செயலாளர் என்.எல்.டப்ளிவ். பண்டாரநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கண்காணிப்பு விஜயத்தை தொடர்ந்து சுற்றுலாத் தலமாக விளங்கும் அறுகம்பே பிரதேசத்தில் கடலரிப்பினால் பாதிப்புக்குள்ளாகும் பிரதேசத்தையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார்.