பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கில்ஜிட்-பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்தை பாகிஸ்தான் வழங்கியது குறித்து சீனா தனது கருத்தை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கில்ஜிட்-பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்தை பாகிஸ்தான் வழங்கி இருக்கிறது. பிரதமர் இம்ரான்கானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. சட்ட விரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ள அந்த பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என இந்தியா கூறியது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையும் அதற்கு இந்தியாவின் எதிர்வினையும் குறித்து சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பினிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்த விவகாரத்தை நாங்களும் கவனத்தில் கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு நிலையாகவும், தெளிவாகவும் உள்ளது. இந்த பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக தொடர்கிறது. இந்த பிரச்சினையை அமைதியாகவும், ஐ.நா. ஒப்பந்தம், தொடர்புடைய பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் சரியாகவும் தீர்க்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

