துருக்கி நிலநடுக்கம்: 3 நாளுக்கு பின் 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு – பலி எண்ணிக்கை 81 ஆனது

307 0

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு துருக்கி நாட்டில் 3.77 லட்சம் பேர் ஆளாகி உள்ளனர். இது தவிர்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கிடையே, துருக்கியின் மேற்கில் உள்ள ஈஜியன் கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. இங்கு 40க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன.
கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.  இதனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 நாட்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து 3 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.