முஸ்லிம் பிரதிநிதிகள் ஏன் 20 ஆவது திருத்தத்தை ஆதரித்தார்கள்?

371 0

20ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை க்கு ஒரு மலையக பிரதிநிதியும் எழு முஸ்லிம் பிரதிநிதிகளும் உதவியிருக்கிறார்கள். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேயே ஆங்காங்கே விமர்சனங்களை காணக்கூடியதாக இருக்கிறது “முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கூறியுள்ளார்.

முகநூலில் முஸ்லிம் நண்பர்கள் தமது பிரதிநிதிகளைக் கடுமையாகத் திட்டி எழுதும் ஒரு நிலைமையை காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் முஸ்லிம் பிரதிநிதிகள் 20ஆவது திருத்தத்தை ஆதரிப்பது என்ற முடிவு தற்செயலானது அல்ல. அல்லது பொதுவாக நம்பப்படுவது போல அதில் பதவி மற்றும் பணம் சம்பந்தப்பட்ட பேரங்கல் இருந்தன என்ற கூற்றும் முழுமையானது அல்ல. தலைவர்கள் எதிராக வாக்களிக்க ஏனைய உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமை என்பதும் தற்செயலானது அல்ல. எல்லாமே நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நாடகத்தின் பிரதிதான். அதாவது கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக எதிரணியில் நிற்கிறார்கள் என்று பொருள். இப்படி நடக்கக்கூடும் என்று வாக்கெடுப்புக்கு முன்னரே சில தூதரக வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்து விட்டது.

முஸ்லிம் பிரதிநிதிகள் ஏன் அவ்வாறு வாக்களித்தார்கள்? ஒரே வரியில் சொன்னால் தற்காப்பு. அதுதான் உண்மை. முஸ்லிம் சமூகம் பெருமளவிற்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. ஈஸ்டர் குண்டுவெடிப்பு அந்த சமூகத்தை பெருமளவுக்கு பாதுகாப்பற்ற; காப்பாற்ற யாரும் இல்லாத ஒரிடத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

கடந்த சில தசாப்தங்களாக முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு அரசியலில் ஈடுபடத் தயாரில்லை. இணக்க அரசியலே அவர்களுடைய ஒரே விருப்பத் தெரிவாக இருந்தது. தமிழ் இயக்கங்களில் சில முஸ்லிம் இளைஞர்கள் இணைந்தார்கள். ஆனால் அது ஒரு சமூகத்தின் பங்களிப்பு அல்ல. முஸ்லிம் சமூகம் இலங்கை தீவை பொறுத்தவரை இணக்க அரசியலையே ஒரே விருப்பத் தெரிவாக கொண்டிருந்தது. கொண்டிருக்கிறது.

எதிர்ப்பு அரசியலை அவர்கள் அனேகமாக முன்னெடுக்க முடியாத ஒரு சமூக யதார்த்தம் அவர்களுக்கு உண்டு. வடக்கில் அவர்கள் சிறுபான்மை. கிழக்கில் அவர்கள் தேங்காய்ப் பூவும் பிட்டும் போல தமிழ் குடியிருப்புக்களோடு கலந்து வாழ்கிறார்கள். தெற்கில் அவர்கள் கஞ்சிக்குள் பயற்றைப் போல கலந்து வாழ்கிறார்கள். அவர்களுடைய பிரதான வருமான வழி வர்த்தககமே என்ற அடிப்படையில் மொழி கடந்து இனம் கடந்து சந்தைகளைச் சமாளிக்க வேண்டிய ஒரு தேவை அவர்களுக்கு உண்டு. இதுவும் அவர்களுடைய இணக்க அரசியலின் ஒரு பகுதிதான்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வலிந்து அகற்றப்பட்ட பின் பொருளாதாரத் தடை மேலும் இறுக்கப்பட்ட பொழுது அரசியல் ஆய்வாளர் மு திருநாவுக்கரசு ஒருமுறை சொன்னார்; “முஸ்லிம் சமூகம் வடக்கில் இருந்திருந்தால் பொருளாதாரத் தடை வெற்றி பெற்றிருக்காது. ஏனென்றால் எந்த ரகசிய வழி ஊடாக எதை எப்பொழுது கொண்டு வரவேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அவர்கள் பொருளாதார தடையை உடைத்திருப்பார்கள்” என்று.

இவ்வாறு இலங்கைத் தீவில் இரண்டு பெரிய தேசிய இனங்களுக்கும் இடையில் தமது அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்த முஸ்லிம்களுக்கு முதலில் சோதனையாக வந்தது ஆயுதப் போராட்டம்தான். எனினும் ஆயுதப் போராட்டத்தை விடவும் அதிகரித்த அரசியல் மற்றும் தொழில் சார் சோதனைகளை அவர்களுக்கு கொடுத்தது ஈஸ்டர் குண்டு வெடிப்புத்தான். ஆயுதப் போராட்டத்தின் போது அவர்களை சிங்கள் மக்கள் அரவணைத்தார்கள். அது ஒரு பிரித்தாளும் தந்திரம்தான். ஆனால் ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின் அவர்களுக்கு அந்த அரவணைப்பு இருக்கவில்லை.

முஸ்லிம் சமூகம் முன்னெப்பொழுதும் அந்தளவுக்கு அச்சுறுத்தலை எதிர் கொண்டதில்லை. அந்தளவுக்கு பாதுகாப்பின்மையை அவமானத்தை அனுபவித்ததில்லை. சமூகத்தின் ஒரு சிறு பகுதி புரிந்த வன்முறைக்காக முழுச் சமூகத்தையும் சந்தேகிக்கும் ஒரு நிலைமையை சஹிரான் ஏற்படுத்தினார். தனது யுத்த வெற்றி வாதத்தை 2019 இற்குப் புதுப்பிப்பதற்கு ஈஸ்டர் குண்டுவெடிப்பைக் கையில் எடுத்த ராஜபக்சக்கள் முஸ்லிம் எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தினார்கள்.

ஏற்கனவே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் ராஜபக்சக்களின் உற்பத்தியாகப் பார்க்கப்படும் பொதுபல சேனா போன்ற தீவிர பௌத்த மத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலான ஓர் அரசியல் சூழலையும் வணிகச் சூழலையும் ஏற்படுத்தினார்கள். அதன் விளைவாக 2009க்கு பின் முஸ்லிம்களின் பொருளாதார இலக்குகள் திட்டமிட்டு தாக்கப்பட்டன. ஈஸ்டர் குண்டு வெடிப்பு இது விடயத்தில் முஸ்லிம்களை முழுக்க முழுக்க பாதுகாப்பற்ற ஒரு நிலைக்குத் தள்ளியது. அதன் தாக்கத்தில் இருந்து இன்றுவரை முஸ்லிம் சமூகம் விடுபடவில்லை.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை குழுவில் முஸ்லிம் பிரமுகர்கள் அளித்துவரும் வாக்குமூலங்கள் அதை நிரூபிக்கின்றன. தங்களுக்கும் தீவிரவாதத்திற்கும் இடையில் தொடர்பு இல்லை என்று  நிரூபிப்பதற்கான பிரயத்தனங்களாகவே அவர்களுடைய வாக்குமூலங்கள் காணப்படுகின்றன. அதில் ஒரு சரணாகதியும் காணப்படுகிறது. நாங்கள் முழு இலங்கைத் தீவுக்குள் இணக்கமாக வாழ விரும்புகிறோம் அதற்காக தீவிரவாதிகளை காட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை குண்டுவெடிப்புக்கு முன்னரே முஸ்லிம் சமூகம் துலக்கமாக வெளிக்காட்டி இருக்கிறது. எனவே ஈஸ்டர் குண்டுவெடிப்பு முஸ்லிம்களை முழு அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பின்னணியில் வைத்துதான் தான் முஸ்லிம் பிரதிநிதிகள் 20ஆவது திருத்தத்தை ஆதரித்ததை விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வட-கிழக்கில் முஸ்லிம்கள் பெருமளவுக்கு ராஜபக்சக்களுக்கு எதிராகவே வாக்களித்தார்கள். சில கிழமைகளுக்கு முன்பு வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் நினைவு கூர்தலுக்கான உரிமையை வேண்டி கடையடைப்பை அனுஷ்டித்த பொழுது அங்கிருந்த முஸ்லீம் வணிகர்களும் தமது ஆதரவைக் காட்டினார்கள். ஆனால் 20 ஆவது திருத்தத்திற்கு அவர்களுடைய பிரதிநிதிகள் ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். தேர்தல் மேடைகளில் அவர்கள் ராஜபக்சக்களுக்கு எதிராகவே உரையாற்றினார்கள். வாக்காளர்கள் மத்தியில் காணப்பட்ட அச்சத்தையும் பாதுகாப்பின்மையும் நன்கு பயன்படுத்தியே வாக்குகளைத் திரட்டினார்கள். ஆனால் அதே அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் மேலும் அதிகப்படுத்தக்கூடிய ஒரு யாப்பு திருத்தத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை இது ஒரு காட்டிக்கொடுப்பு. ஜனநாயகத்தை பாதிகாக்கும் சக்திகளை பொறுத்தவரை இது ஒரு காட்டிக்கொடுப்பு. ஆனால் முஸ்லிம் பிரதிநிதிகளை பொறுத்தவரை அவர்களுக்கு இதை விட வேறு வழி இல்லை. ஏனெனில் முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் நிலையில் இல்லை. அவ்வாறு எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தால் அது முளையிலேயே நசுக்கப்படும் ஒரு நிலைமைதான் இலங்கைத் தீவில் உண்டு. முஸ்லீம் சமூகத்துக்கு இலங்கைக்கு வெளியே அயலில் பலமான பின் தளம் கிடையாது. தமிழ் மக்களுக்கு உள்ளதை போன்று பலமான புலம்பெயர் சமூகமும் கிடையாது. எல்லாவற்றையும் விட முக்கியமாக நாட்டுக்குள் அவர்கள் இரண்டு பெரிய தேசிய இனங்களோடும் கலந்து காணப்படுகிறார்கள். தமிழ் மக்களோடு அவர்களுடைய உறவு ஏற்கனவே சீர்கெட்டிருக்கிறது.

இது தொடர்பில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக் குழுவில் ரணில் விக்கிரமசிங்க கூறியதை இங்கு சுட்டிக்காட்டலாம்; “முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து பிரித்து, தனியான தரப்பாக அடையாளப்படுத்தியது மறைமுக தந்திரோபாய வியூகம். இதன் மூலம் யுத்தத்தின் போது உளவுத் தகவல்களை பெறுவது இலகுவானது.”

அதாவது இரண்டு சிறிய தேசிய இனங்களையும் மோத விடுவதில் பெரிய தேசிய இனம் கணிசமான அளவு வெற்றியை பெற்று விட்டது. இதனால் முஸ்லிம்கள் தமிழ் மக்களை நோக்கி வர முடியாத ஒரு அரசியல் சூழ்நிலை இலங்கைத் தீவில் இப்பொழுதும் உண்டு. இந்நிலையில் ஒடுக்குமுறைக்கு எதிராக இரண்டு சிறிய தேசிய இனங்களும் போராடும் ஓர் அரசியல் தெரிவை மேற்கொள்ள முஸ்லிம்களால் முடியாதிருக்கிறது. அதேசமயம் தன்னை அவமானகரமான விதங்களில் துன்புறுத்துகின்ற பெரிய தேசிய இனத்தோடு அவர்களால் இணைந்து வாழவும் முடியாது. எனவே தன்னை விடப் பெரிய இரண்டு இனங்களுக்கும் பயப்படும் ஒரு மிகச் சிறிய தேசிய இனம் என்ன தெரிவை எடுக்கலாம்?

அவர்கள் அப்படி முடிவெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு ராஜபக்சக்கள் முதலில் ரிசாத்தின் சகோதரரைக் கைது செய்தார்கள். அவர் மீது வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மாறாக அவரை விடுதலை செய்தார்கள். பின்னர் ரிஷாத்தைக் கைது செய்தார்கள். அவரை கோவிட்-19 உடுப்போடு நாடாளுமன்றத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். அதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு அவர்கள் ஒரு செய்தியைக் கூற முயன்றார்கள். அந்த செய்தியை முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கிக் கொண்டார்கள். அதற்கு முன்னரே அவர்கள் முடிவெடுத்து விட்டார்கள். அந்த முடிவு அவர்களுடைய இணக்க அரசியலை ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின்னரான நிலைமைகளுக்கு ஏற்ப எப்படி சுதாகரித்துக் கொள்வது என்பதுதான்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். முஸ்லிம்கள் எதிர்ப்பு அரசியலுக்கே போக மாட்டார்கள் என்று சொன்னால் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஆட்சியை குழப்பிய பொழுது அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் தமிழ் சிங்கள தரப்புக்களுடன் நின்று ராஜபக்சவை தோற்கடித்தது எப்படி?

ஏனென்றால், அக்கால கட்டத்தில் ஒப்பீட்டளவில் அதிகரித்த ஒரு ஜனநாயகச் சூழல் இருந்தது. ஜனநாயகத்திற்காக சிங்கள-தமிழ் தரப்புக்களோடு ஐக்கியமாக நிற்பதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று முஸ்லிம்கள் நம்பினார்கள். அவ்வாறு ஐக்கியப்பட்டு நிற்பதால் ராஜபக்சக்களைத் தோற்கடிக்கலாம் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையே அந்த ஐக்கியத்திற்கு காரணம். ஆனால் பின்னர் நிகழ்ந்த தேர்தல்களில் ராஜபக்சக்கள் பெற்ற வெற்றியானது அப்படி நம்பிக்கொண்டு இனிமேலும் அவர்களை எதிர்க்க முடியாது என்ற எச்சரிக்கை உணர்வை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் வரையிலுமான காலகட்டத்தில் ராஜபக்சக்கள் முஸ்லிம் சமூகத்தை அணுகிய விதம் அவ்வாறான சமிக்கைகளைத்தான் வெளிப்படுத்தியது.

எனவே கோவிட்-19க்குப் பின்னரான இணக்க அரசியல் இப்படித்தான் அமைய முடியும். முஸ்லிம் பிரதிநிதிகள் எடுத்த முடிவை அவர்களுடைய தற்காப்பு உணர்வுக்கூடாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு இரண்டாவது சிறிய தேசிய இனம் ஒன்று உயிர் பிழைத்திருக்கும் அரசியலை–survival-நோக்கித் தள்ளபட்டமை என்பது இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த ஜனநாயகச் சூழலின் சிதைவையும் காட்டுகின்றது.

  • நிலாந்தன்