யாழ். பேருந்து நிலைய வியாபாரிகள் போராட்டம்

49 0

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் இரு மருங்கிலும் வியாபாரம் நடத்தும் வியாபாரிகள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மாநகர முதல்வருக்கு தமது கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாநகர சபையினால், பேருந்து நிலைய பகுதியில் உள்ள கடைகளை அகற்றுமாறு தெரிவித்திருந்த நிலையில், வியாபாரிகள் தமது நிலைப்பாடு தொடர்பில் வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்ததுடன், பல போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில், இன்று காலை யாழ்.மாநகர சபை முன்பாக ஒன்று கூடிய வியாபாரிகள் தமது போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

பேருந்து நிலைய பகுதியில் உள்ள வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரினால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்றும், வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாகவும், அந்த கடன்களை திருப்பிக்கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும், அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும், தெரிவித்ததுடன், தமது நிலமையை உணர்ந்து, பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.