சென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

216 0

சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், சென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்களை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும், கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை என்று கட்சி சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

முதல் கட்டமாக 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாகிகள் நியமனத்தை அ.தி.மு.க. கையில் எடுத்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அ.தி.மு.க. நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, கட்சி பணிகளை விரைவுப்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் தென் சென்னை, வட சென்னை மாவட்டங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டு, பின்வரும் சட்டசபை தொகுதிகளை கொண்டு செயல்படும். புதிய மாவட்ட செயலாளர்களாக கீழ் கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட சென்னை தெற்கு (கிழக்கு) ராயபுரம், திரு.வி.க.நகர் (தனி) சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் டி.ஜெயக்குமார் நியமிக்கப்படுகிறார். வட சென்னை தெற்கு (மேற்கு) எழும்பூர் (தனி), துறைமுகம் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக நா.பாலகங்கா நியமிக்கப்படுகிறார்கள்.

தென் சென்னை வடக்கு (கிழக்கு) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக ஆதிராஜாராம், தென் சென்னை வடக்கு (மேற்கு) தியாகராயநகர், அண்ணாநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக தி.நகர் பி.சத்யா, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிக்கு மாவட்ட செயலாளராக அசோக், தென் சென்னை தெற்கு (மேற்கு) விருகம்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக விருகை வி.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

ஆர்.கே.நகர், பெரம்பூர் சட்டசபை தொகுதிகளுக்கு உள்ளடக்கிய பகுதிகளுக்கு மட்டும் மாவட்ட செயலாளர் நியமிக்கப்படவில்லை.