சில் துணி பகிர்ந்தளிப்பு வழக்கில் 3 வருட சிறைத் தண்டணை பெற்று தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோர், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (23) நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த மனு மீதான வாய்மூல சமர்ப்பணங்கள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்துள்ள நிலையில் விக்கு தொடர்பான ஏதேனும் எழுத்து மூல கோரிக்கைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் முன்வைக்குமாறு நீதிபதிகள் இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லினுக்கும் அதிகமான நிதியை பாவித்து நாடு முழுவதும் உள்ள விகாரைகளுக்கு சில் துணிகளை பகிர்ந்தளித்தமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக நல்லாட்சியின் போது இருந்த சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இதனால் லலித் வீரதுங்க மற்றும் அநுச பெல்பிட்ட ஆகியோருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டேம்பர் 7 ஆம் திகதி 3 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமக்கு அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும் எனவே, தம்மை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

