திருகோணமலைக்கு அப்பால் இந்திய – இலங்கை கடற்படையினரின் SLINEX-20 கூட்டுப் பயிற்சி

288 0

இந்திய இலங்கை கடற்படைகளின் எட்டாவது தொகுதி வருடாந்த கூட்டுப் பயிற்சியான SLINEX-20 திருகோணமலைக்கு அப்பாலுள்ள கடல் பிராந்தியத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று நேற்று முடிவடைந்திருக்கின்றது.

இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலான சயுரா மற்றும் பயிற்சிக் கப்பலான கஜபாஹு ஆகியவற்றுடன் இலங்கை கடற்படையின் தலைமை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலக தலைமையிலான குழுவினர் இலங்கை கடற்படையினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த பயிற்சிகளில் கலந்துகொண்டனர்.

அதேவேளை நீர்மூழ்கிகளை தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க் கப்பல்களான கமோர்டா மற்றும் கில்தான் ஆகியவற்றுடன் கிழக்கு மண்டல கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சஞ்சய் வத்சயன் தலைமையிலான குழுவினர் இந்திய கடற்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். இது தவிர, இந்திய போர்க் கப்பல்களில் இருக்கும் நவீன இலகு ரக ஹெலிகொப்டர்கள் மற்றும் சேத்தக் ரக ஹெலிகொப்டர்கள், கடற்படையின் டோர்னியர் ரோந்து விமானம் ஆகியவையும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்றிருந்தன. இதற்கு முந்தைய SLINEX கூட்டுப் பயிற்சி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாகப்பட்டினம் அருகே நடந்தது.

அதேவேளை இரு கடற்படையினருக்கும் இடையிலான கடல் சார் பன்முக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சிறந்த செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகளை பரிமாறிக்கொள்வதற்கும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தவும் SLINEX-20 பயிற்சியானது சந்தர்ப்பங்களை வழங்குகின்றது. மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய போர்க்கப்பல்கள் மற்றும் இலக ரக விமானங்களின் திறனையும், இந்த கூட்டுப் பயிற்சி வெளிப்படுத்தும். தரை மற்றும் விமான எதிர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகளுடன் துப்பாக்கிச் சூடு, மாலுமிகளுக்கான புதிய வழிமுறைகள், இரு கப்பல்களிடையிலான பரிமாற்றங்கள் போன்றனவுக்கும் இந்த பயிற்சியின்போது முக்கியத்துவம் வழங்கப்படுகிறது, இதன் காரணமாக இரு கடற்படைகளுக்கும் இடையில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் உயர் செயல்திறன் மேம்படும்.

அதுமட்டுமல்லாது கடல் மார்க்கமான பரஸ்பர ஒத்துழைப்பினை விஸ்தரித்துள்ள இந்தியா இலங்கை இடையிலான மிகவும் ஆழமான பிணைப்பினை இந்த பயிற்சியானது மேலும் விஸ்தரிக்கின்றது. கௌரவ பிரதமர் அவர்களின் நோக்கான “பிராந்தியத்தில் சகலருக்கும் பாதுகாப்பும் அபிவிருத்தியும்” (சாகர் கோட்பாடு) என்ற அடிப்படையிலும் இந்தியாவின் “அயலுறவுக்கு முதலிடம்” என்ற கொள்கையின் அடிப்படையிலும் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் இடையிலான தொடர்புகள் அண்மைய காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவில் மேலும் வளர்ச்சியடைந்துள்ளன.

2020 செப்டெம்பரில் இலங்கையின் கிழக்கு கரைக்கு அப்பால் தீவிபத்தில் சிக்கிய பாரிய எண்ணெய் கப்பலான எம்.டி.நியூ டயமன்ட்டை கூட்டாக இணைந்து மீட்பதற்கு SLINEX பயிற்சிகளின்போது இலங்கை இந்திய கடற்படையினரிடையில் ஏற்பட்ட புரிதல் காரணமாக அமைந்துள்ளது.

இந்த பயிற்சியானது கொவிட் 19 பெருநோய் காரணமாக நேரடித்தொடர்புகள் எதுவுமின்றி நடுக்கடலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.