சிறிலங்காவில் கொரோனா தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம்!

250 0

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொரோனா சவால்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடிய  நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த தினத்தில் சமர்ப்பிக்கவிருந்த அனுதாபப் பிரேரணை சமர்ப்பிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று முற்பகல் சபையில் கேள்வி எழுப்பியதுடன், அதனையடுத்து எதிர்க்கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இது தொடர்பில்  நாடாளுமன்ற விவாதமொன்றை கோரினார்.

அதற்கமைய, எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக அந்த விவாதத்தை நடாத்த ஆளும்கட்சி சம்மதம் தெரிவித்ததுடன், அன்றைய தினம் முற்பகல் வாய்மூல விடைக்கான வினாக்கள் மற்றும் மதியபோசன இடைவேளை இன்றி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.