20வதுக்கு எதிராக முதுகெலும்பு உள்ள ஆளும் தரப்பு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்- ஹரின்

374 0

20ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக முதுகெலும்பு உள்ள ஆளும் தரப்பு உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியளார் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஹரின் பெர்ணான்டோ மேலும் கூறியுள்ளதாவது, “மக்களிடம் காணப்படும் அதிகாரத்தை தனியொருவருக்கு வழங்குவதற்காக, அரசாங்கம் தற்போது தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இதற்கெதிராக விமல் வீரவன்ஸ உள்ளிட்ட சில அமைச்சர்களே இன்று எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.

எனினும், அரசாங்கத்தில் இருந்து எதிர்ப்பவர்கள் 20இற்கான வாக்களிப்பின்போது, எவ்வாறு செயற்படுவார்கள் என உறுதியாகக் கூறமுடியாது.

மதகுருமார்கள் அனைவரும் 20ஐ எதிர்த்துள்ளார்கள். எனினும், 20ஐ எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்றே அரசாங்கம் முற்படுகிறது.

20தொடர்பாக விவாதமொன்றை நடத்தியிருக்கலாம். ஆனால், அதைவிடுத்து வியாழக்கிழமையே இதனை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றம் என்ற ஒன்றே தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் ஒருவருக்கு மட்டும் கட்டுப்பட்டால் போதும். இதனை எதிர்த்தே நாம் உயர்நீதிமன்றை நாடினோம்.

நவம்பர் 16ஆம் திகதியுடன் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று ஒரு வருடம் முடிவடைகிறது. உண்மையில், இந்த ஒரு வருடக்காலம் என்பது ஜனாதிபதியின் தோல்விக்குரிய காலமாகவே கருதப்படுகிறது.

இந்த ஜனாதிபதியுடன் ஒப்பிடும்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த அரசியல்வாதியென்றே கூறவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.