தமிழக கவர்னருடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு – 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்

295 0

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவரும் நிலையில் தமிழக கவர்னரை 5 அமைச்சர்கள் இன்று சந்தித்துள்ளனர்.

மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை 5 அமைச்சர்கள் இன்று சந்தித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கேபி அன்பழகன், செங்கோட்டையன், சிவி சண்முகம் ஆகியோர் கவ்வர்னரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் என கவர்னரிடம் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பிற்கு பின்னர், தமிழக அரசு அனுப்பிய உள் ஒதுக்கீடு தொடர்பான சட்டத்திருத்தம் மீது காலம் தாழ்த்தாமல் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஒரு மாதம் ஆகியும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் முடிவு எடுக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.