இனப்படுகொலை’ தந்த மனித மாமிச ருசி, சிறீலங்கா அரசை தலைகால் புரியாமல் குதிக்க வைக்கிறது. – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

54 0

ஊடக அறிக்கை
(14.10.2020, புதன் கிழமை)

‘பலம் தான் உலக ஒழுங்கை நிச்சயம் செய்யும்’ எனும் வல்லரசுகளின் நீதிக்காலத்திலும் கூட, உலகில் தனித்த தேசமாக விடுதலையைப் பெற்றுவிட போராடிக் கொண்டிருக்கும் ஏனைய தேசிய இனங்களின் கொள்கைப் பற்றுறுதியைப் போலவே, இருபதாம் நூற்றாண்டில் மாபெரும் தமிழினப் படுகொலையை சந்தித்த பின்னும் தமிழ்த் தேசிய இனமும் சமரசமின்றிய தீர்வுக்காக பெருத்த நம்பிக்கையோடு விடுதலை வேட்கை கொண்டு நிற்கிறது.

இந்த விடுதலை வேட்கையின் ஓர் அங்கமாக தமிழீழ மக்கள் மீதும் தமிழீழ மண்ணின் வளங்கள் மீதும் கரிசனை கொண்டு செய்தி அறிக்கைகளை தயாரித்து, தமிழர் தேசத்தின் அபாய நிலைமையை உலகறிய எச்சரிக்கைச் செய்து வரும் தமிழ் ஊடகவியலாளர்கள் இருவர் மீது கொலை முயற்சி தாக்குதல் கடந்த 2020.10.12 திங்கள் அன்று நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழீழ தேசத்தை இராணுவ படை பல ரீதியாக சிறீலங்கா அரசு ஆக்கிரமிப்புச் செய்து விட்டது. ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட எமது தேசத்தின் வளங்களை கொள்ளையடிக்கும் – தமிழ்ச் சமூகத்தை நெறிபிறழச் செய்து பண்பாட்டு கட்டமைப்பை உடைக்கும் நாசகார வேலைகளிலும் சமூக விரோத கும்பலை வைத்து சிறீலங்கா அரசு இயக்குகின்றது. அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்பு படைகளும், ஏவல் திணைக்களங்களும் மரபு வழித் தாயகமாக தமிழ் மக்கள் கொண்டிருக்கும் நிலபுலத் தொடர்ச்சிகளை துண்டறுத்து, பெருந்தேசிய கம்பனிகளுக்கு கூறு போட்டு விற்கும் கட்டமைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பையும், இனப்பரம்பலை சிதறடிக்கும் சிங்கள குடியேற்றங்களையும் நின்று நிதானித்து திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கின்றன.

காடுகளை ஊடுருவி அரிந்து கொட்டுவது, கனிய வளங்களை குடைந்து சூறையாடுவது, கடல் வளத்தை அபகரிப்பது, விளைநிலங்களையும் மேய்ச்சல் தரவைகளையும் பண்ணை நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்துவது, தொன்மை மிகுந்த வழிபாட்டுத் தலங்களையும் வரலாற்று வாழிடங்களையும் பௌத்த சிங்கள மயமாக்குவது, இவை எல்லாமே இப்போதும் கூட தமிழீழத்தில் சத்தமே இல்லாத பெரும் போரை தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

தமிழர் தேசம் எதிர்கொள்ளும் அபாயத்தை அம்பலப்படுத்தும் மண் நேயம், உயிர் நேயம், சூழல் நேயம் கொண்டு செயலாற்றும் சிவில் சமூக மனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களை தாக்கி காயப்படுத்துவது, கொலை அச்சுறுத்தல் விடுப்பது, கைது செய்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவது என்று சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களும், மனித குலத்துக்கு எதிரான வன்முறைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. போர் வெற்றி வாத கர்வம், இனப்படுகொலை தந்த மனித மாமிச ருசி இவை சிறீலங்கா அரசை தலைகால் புரியாமல் குதிக்க வைக்கிறது. ஆகவே சிறீலங்கா ஆனது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவின் நட்புக் கோரிக்கைகளை காது கொடுத்தும் கேட்பதில்லை.

சிறீலங்கா ஒரு ஜனநாயக நாடு அல்ல. அது ஜனநாயக உரிமைகளையும், மனித விழுமியங்களையும் கிஞ்சித்தும் தானும் மதிக்க கற்றுக் கொள்ளாத காட்டேறிகளின் நாடு. காட்டு மிராண்டித்தனமான இராணுவ ஆட்சியை நோக்கி சிறீலங்கா பயணித்துக் கொண்டிருக்கிறது. அது தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்து தமிழீழ மக்களை அடிமைகளாகவே நடத்திக் கொண்டிருக்கிறது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு இராஜிய சந்திப்புகளில் மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தி கூறி வருவதைப் போல தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பான கௌரவமான வாழ்க்கைக்கும் உத்தரவாதம் யாதெனில், சர்வதேச தலையீடுகள் தொடர்ந்தும் சிறீலங்காவுக்கு உள்ளே வலிந்து இருக்க வேண்டும். ஐ.நாவின் மேற்பார்வையில் நிரந்தர அரசியல் தீர்வுக்காக பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

தலைவர் கோ.ராஜ்குமார் (0094 77 854 7440)
ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா