பிரான்ஸை விட்டுத் தனிநாடாகப் பிரிய கலிடோனிய மக்களுக்கு மனமில்லை; பாதிப்பேர் மீண்டும் மறுத்து வாக்களிப்பு

383 0

பிரான்ஸில் இருந்து தனிநாடாகப் பிரிந்துபோவதற்கான இரண்டாவது கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் நியூ கலிடோனிய மக்கள் (Nouvelle-Calédonie) மும்முரமாகப் பங்குகொண்டு (85.85வீதம்) வாக்களித்திருக்கிறார்கள். எனினும் மீண்டும் பிரிவினைக்கு எதிராக 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் (“NO”) பதிவாகி உள்ளன. பிரெஞ்சு நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்ட முடிவுகளின் படி 53.26 வீதமானோர் பிரிந்து செல்வதை எதிர்த்து வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.

நியூ கலிடோனிய மக்கள் பிரான்ஸுடன் சேர்ந்திருப்பதற்கான தமது விருப்பத்தை மீண்டும் வெளியிட்டிருப்பதை அதிபர் மக்ரோன் வரவேற்றுள்ளார்.

“பிரெஞ்சுக் குடியரசு மீதான ஆழ்ந்த நம்பிக்கையை வாக்கெடுப்பில் வெளிப்படுத்தியமைக்காக அரசுத் தலைவர் என்ற ரீதியில் அந்த மக்களது முடிவை நன்றியுணர்வுடன் வரவேற்கின்றேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸில் இருந்து மிகத் தொலைவில் – 18ஆயிரம் கிலோமீற்றர்கள் தூரத்தில்- தென் பசுபிக் சமுத்திரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள அழகிய தீவுக் கூட்டம் நியூ கலிடோனியா. பிரான்ஸின் காலனித்துவ ஆளுகைக்குட்பட்ட இத் தீவில் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

“பிரான்ஸில் இருந்து பிரிந்து இறைமையுள்ள சுதந்திர தனித் தேசமாக வாழ விரும்புகின்றீர்களா” என்ற கேள்விக்கு அந்த மக்களது விருப்பத்தைக் கோரும் கருத்துக் கணிப்பை மூன்று கட்டங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. முதலாவது கட்டம் 2018 இல் நடந்தது. அதில் 56.7 வீதமானோர் பிரிவினையை மறுத்து (NO) வாக்களித்திருந்தனர். எனினும் வாக்காளர்களில் சுமார் அரைவாசிப் பங்கினர் பிரிந்து செல்வதை ஆதரிப்பதை அந்த முடிவுகள் வெளிக்காட்டி இருந்தன.

“கலிடோனியா இல்லாத பிரான்ஸின் அழகு முழுமை பெறாது” என்று அதிபர் மக்ரோன் அச்சமயம் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையி்ல் கருத்துக்கணிப்பின் இரண்டாவது வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை 304 நிலையங்களில் நடத்தப்பட்டது. கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் நடைபெற்ற இந்த இரண்டாவது கட்டத்தில் வாக்களிப்பு மிக அமோகமாக இருந்தது ஆனால் இம்முறையும் வாக்கெடுப்பில் தனிநாட்டுத் தீர்மானம் வெற்றி பெறவில்லை. இதனால் மூன்றாவது கட்ட வாக்களிப்பு 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட வாய்ப்புள்ளது.

சுமார் 170 ஆண்டுகாலமாக நீடித்துவரும் பிரான்ஸின் காலனித்துவ ஆளுகையை முடிவுக்குக் கொண்டுவரும் ஓர் உடன்படிக்கை (Noumea Accord) 1998 ஆம் ஆண்டில் நியூ கலிடோனியத் தலைநகர் நௌமியாவில் உருவாக்கப்பட்டது. சுயவிருப்பத்தின் பேரில் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான விருப்பத்தை அறியும் வாக்கெடுப்புகள் அந்த உடன்படிக்கையின் கீழேயே நடத்தப்பட்டுவருகின்றன.

உடன்படிக்கை எட்டப்படுவதற்கு முந்திய காலப்பகுதியில் 1988 இல் கலிடோனிய தீவுக் கூட்டங்களில் ஒன்றான ஊவியாவில் (Ouvéa) பிரெஞ்சு ஜொந்தாம் துருப்பினர் நால்வர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர். நிராயுதபாணிகளான 27 ஜொந்தாமினர் அங்குள்ள குகை ஒன்றினுள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

நியூ கலிடோனியாவுக்கு பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் கோரிப் போராடிய கனாக்(Kanak ) பழங்குடி இனக் கிளர்ச்சியாளர்களே இத்தாக்குதலை நடத்தியிருந்தனர். “ஊவியா பணயக் கைதிகள் சிறைப்பிடிப்பு ” என அழைக்கப்பட்ட அந்தப் பணய நாடகம் இருவாரங்கள் நீடித்தது. கைதிகளை விடுவிப்பதற்காக கிளர்ச்சியாளர்களுடன் சமரசம் செய்ய மறுத்த பிரெஞ்சு அரசு, தனது கொமாண்டோக்களை அங்கு அனுப்பி பணயக்கைதிகளான ஜொந்தாமினரை படை நடவடிக்கை மூலம் மீட்டது.

பணயக் கைதிகளை மீட்பதற்காக காடுகளில் நடந்த சண்டையில் பிரெஞ்சுப் படைகளால் உயிருடன் பிடிக்கப்பட்ட “கனாக்” கிளர்ச்சியாளர்கள் பலர் பின்னர் கொல்லப்பட்டனர் என்று குற்றச்சாட்டுகள் உள்ளன.