முன்னாள் போராளிகளின் வளர்ச்சிக்காக அரசோ, சர்வதேசமோ உதவவில்லை: ஜெனீவாவில் சுட்டிக்காட்டு

291 0

“போர் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகள் முடிந்தும் அரசாலோ பன்னாட்டு அமைப்புகளாலோ முன்னாள் போராளிகளின் வளர்ச்சிக்காக எவ்வித உதவிகளும் கொடுக்கப்படவில்லை” என ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்

அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 5 – மனித உரிமைகளின் கூறுகள் மற்றும் பொறிமுறைகள் (Item 5 : Human rights bodies and mechanism – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் இளம் தமிழ் மாணவர் ( Jeunesse Etudiante Tamoule) என்ற அமைப்பின் சார்பாக உரையாற்றிய பிரபாகரன் அர்சேனித்தா அவர்கள் தனது உரையில் தெரிவித்தவை வருமாறு;

“இன அழிப்பு நடந்து 11 ஆண்டுகள் முடிந்த பிறகு தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் பின்னடைந்துள்ளது. மோசமான மாற்றங்களை அடைந்துகொண்டிருக்கின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 1, 46, 000 மேற்பட்ட தமிழர்கள் கொலைசெய்யபட்டனர்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தமிழர் அரசியல் பகுதிகளையும், சமய இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து, இன அழிப்பு போர் நடைபெற்ற காலத்தில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற தடைவிதிக்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்கள் தொடர்ந்து தங்களது உறவுகளுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுகின்ற தாய்மார்கள் சிங்கள பேரினவாத இராணுவத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர்.

20 ஓகஸ்ட் 2020 அன்று அமலநாயகி அரசு உருவாக்கிய குண்டர் படையினரால் மட்டக்களப்பில் தாக்கப்பட்டார். இதுபோல் சில வாரங்களுக்குபின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை கொண்டாடிய பிறகு செல்வராணி தம்பிராசாவை பாதுகாப்பு துறையினர் அழைத்து, விசாரணை நடத்தினர். மேலும் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட 100க்கு மேற்பட்ட பெண்கள் தமிழர் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள இராணுவத்தால் பாதிக்கப்பட்டனர். இராணுவம் தொடர்ந்து முன்னாள் போராளி குடும்பங்களை துன்புறுத்தி வருகின்றது. போர் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகள் முடிந்தும் அரசாலோ பன்னாட்டு அமைப்புகளாலோ அவர்களது வளர்ச்சிக்காக எவ்வித உதவிகளும் கொடுக்கப்படவில்லை.

அதனால் உடனடியாக தமிழர் இன அழிப்பு மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டுமென்பது தமிழர்களின் நீதியான கோரிக்கை ஆகும்” என்று அவர் தெரிவித்தார்.