20 ஆவது திருத்தத்தால் மக்களின் இறையாண்மை பாதிக்கப்படும் – ருவான்

313 0

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தால் பௌத்தமதம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் நான்கு முக்கிய தூண்களில் நிர்வாகி மட்டுமே பலப்படுத்தப்படும்போது, ​​மக்களின் இறையாண்மை பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களில் மக்களின் இறையாண்மையும் உள்ளது என சுட்டிக்காட்டிய ருவான் விஜேவர்தன, 20 வது திருத்தத்தால் சட்டம், நீதித்துறை மற்றும் ஊடகம் ஆகியன முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும் அரசியலமைப்பின் நோக்கம் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதாகும் என குறிப்பிட்ட அவர், மக்களின் இறையாண்மை மீறப்படும்போது, ​​பௌத்த மதம் அச்சுறுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மக்களின் இறையாண்மை மறுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது இலங்கையர்கள் சோழர்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் எதிராக போராடினார்கள் என்றும் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் முன்மொழியப்பட்ட சட்டம் இயற்றப்பட்டால், அது நீதித்துறையின் சுதந்திரத்தை அழிக்கும் என்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த முடியாது என்றும் குறிப்பிட்ட ருவான் விஜேவர்தன, கணக்காளர் நாயகத்தின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவது ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறினார்.