நிர்வாகத்தை கவனிக்க முடியாத அளவுக்கு டிரம்ப் நோய்வாய்ப்பட்டால் என்ன நடக்கும்? -அரசியல் பார்வை

229 0

டிரம்புக்கு கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து, ஜனாதிபதியாக தனது பங்கை நிறைவேற்ற முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டால் அரசியலில் என்ன நடக்கும்? என்பதை பார்ப்போம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர்.
அதன்பின்னர் டிரம்பிற்கு நேற்று முதல் தொடர்ந்து லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக அதிபர் டிரம்ப் அலபாமாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அதிபர் டிரம்ப் மருத்துவனையில் அனுமதிக்கப்படுள்ளார் எனவும், சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் டிரம்பின் தேர்தல் பணிகள் மற்றும் அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டிரம்புக்கு வைரஸ் அறிகுறிகள் தீவிரமடைந்து, ஜனாதிபதியாக தனது பங்கை நிறைவேற்ற முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டால் என்ன ஆகும்?  என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, நாட்டை யார் வழிநடத்துவது என்பது குறித்த கேள்வி எழுந்தது. இதற்கான முறையான நடைமுறைகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். பிரதமர் போரிஸ் ஜான்சனால் நாட்டை வழிநடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அவரது வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் பணிகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவைப் பொருத்தவரை, அரசியலமைப்பிலும் கூட்டாட்சி சட்டத்திலும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. அதிபரால்  தனது பணிகளை கவனிக்க முடியாவிட்டால், யார் பொறுப்பேற்க வேண்டும் என்று சட்டத்தில் வழிகாட்டுதல் உள்ளது. ஆனால், ஜனாதிபதி தனது பணிகளை மேற்கொள்ள தகுதியற்றவர் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இந்த நடைமுறை அவ்வளவு தெளிவாக இல்லை.
அரசியலமைப்பு சட்டத்தின் 25ஆவது திருத்தத்தின்படி, அதிபர் டிரம்ப் அந்த தீர்மானத்தை தானே செய்ய முடியும். மேலும் செனட்டுக்கு எழுதிய கடிதத்துடன், அதிகாரப்பூர்வமாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸிடம் அதிகாரத்தை ஒப்படைக்க முடியும். டிரம்ப் மீண்டும் அதிகாரத்தை திரும்பப் பெறுவதாக செனட் சபையில் அறிவிக்கும் வரையில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆட்சி செய்வார்.
இதேபோல் 25ஆவது திருத்தத்தில் மற்றொரு விதியும் உள்ளது. ஜனாதிபதியால் தற்காலிகமாக தனது அதிகாரத்தை மற்றொருவருக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டால், துணை ஜனாதிபதியும் அமைச்சரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களும் இணைந்து தொழில்நுட்ப ரீதியாக அதிகாரத்தை ஜனாதிபதியிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியும்.
துணை ஜனாதிபதியும் பெரும்பான்மை அமைச்சரவையும் இதற்கு உடன்படவில்லை என்றால், ஜனாதிபதியிடம் இருந்து நிரந்தரமாக அதிகாரத்தை பெறுவதற்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தலாம். ஆனால், ஜனாதிபதி கோமா நிலையில் இருந்தாலோ அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த விதியை பயன்படுத்த முடியும்.
ரீகன் 1981ல் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, ரீகன் நிர்வாகம் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பான சட்ட வரைவு தயார் செய்து, செனட்டிற்கு கடிதங்களை அனுப்பியது. ஆனால் அதில் கையெழுத்திடப்படவில்லை. அவற்றை ரீகன் நூலக இணையதளத்தில் காணலாம்.
டுவைட் ஐசனோவர் 1950களில் பதவியில் இருந்தபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். 25வது சட்டத்திருத்தத்திற்கு முன்பு இது நிகழ்ந்தது. எனவே அரசியலமைப்பு விதி எதுவும் இல்லை. அதற்கு பதிலாக அவர் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனுடன் அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து ஒரு உடன்படிக்கை மேற்கொண்டார்.
நிர்வாகத்தில் உள்ள தலைவர்கள் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டால் என்ன செய்வது?
தற்போது வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் ஊடுருவியுள்ளதால், நிர்வாகத்தின் பல உறுப்பினர்களை வைரஸ் முடக்கி போடுவதற்கு வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியுடன் தொடர்பில் இருக்கும் பென்ஸ், நிதித்துறை மந்திரி ஸ்டீவன் முனுச்சின் ஆகியோருடன் டிரம்ப் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு டிரம்ப் பரிந்துரை செய்துள்ள அமி கோனே பாரெட், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி, செனட்டர்களை சந்திக்க கேபிடல் ஹில் பகுதிக்கு பயணம் செய்து வருகிறார்.
ஜனாதிபதியின் அதிகாரத்தை வேறு ஒருவருக்கு மாற்றுவதற்கான சட்டம், 1948 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இது நீண்ட கால திட்டமாகும். மரணம், ராஜினாமா, பதவியில் இருந்து நீக்குதல், இயலாமை அல்லது தகுதிநீக்கம் போன்ற காரணங்களால், ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதியின் அதிகாரங்களை மற்றொருவருக்கு மாற்ற முடியும். இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது. அடுத்தடுத்த திட்டங்களுக்கு அப்பால், அரசாங்கம் செயல்படுவதற்கான திட்டங்களையும் அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
ஒபாமா நிர்வாகத்தின்போது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக பதவி வகித்த ஜூலியட் கயீம், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கூறுகையில், ‘அரசாங்க நடைமுறைகளும் திட்டங்களும் தெளிவாக இருப்பதால், அரசாங்கம் செயல்படத் தவறுவது குறித்த மக்கள் கவலைப்படக் கூடாது’ என்றார்.
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோரின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இடம்பெற்றுவிட்டன. மக்கள் மெயில் மூலமாக ஏற்கனவே வாக்களிக்க தொடங்கிவிட்டனர். எனவே, தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது.