ஒற்றுமை நீடித்தால் வெற்றிகள் தொடரும்

376 0

யிரிழந்தவர்களை நினைவு கூருவது ,அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வது , அஞ்சலி செலுத்துவது மனித குலத்தினாலும் ஐ.நா.சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமானக் கடப்பாடு . உலகம் முழுவதும் இவ்வாறான மனிதாபிமானக் கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் மட்டுமே சிறுபான்மையினமான தமிழினத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கான கடப்பாடுகள்,உரிமைகள் இலங்கையை மாறி,மாறி ஆட்சி செய்து வரும் சிங்கள அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வரும் நிலையில் சிங்களத்தரப்பில் அதற்கான முழு உரிமைகளும் வழங்கப்பட்டுள்ள இனவாதப்போக்கு அரசியலே இன்று வரை தொடர்கின்றது.

திலீபன், ஈழ விடுதலையில் மாபெரும் அஹிம்சை போராட்டம் நடத்தி உயிர் நீர்த்தவர்.உண்ணா விரதம் என்றாலே நகைப்புக்குரிய ஒன்றாக மாறிவிட்ட இக்காலச் சூழலில், கொண்ட கொள்கைக்காக சொட்டு நீர் அருந்தாமல் உயிர் துறந்து, உலகத்தின் செவிப்பறைகளில் உண்ணா விரதத்தின் மகத்துவத்தை ஓங்கி ஒலித்தவர். அமைதி ஒப்பந்தம் என்கிற பெயரில் தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோக மீண்டும் ஓர் ஒப்பந்தம் கையொப்பமானதுதுடன் அதை ஏற்றுக்கொள்ளவும் நிர்ப் பந்திக்கப்பட்டனர். அதை மறுத்த காரணத்தால், அமைதியை நிலைநாட்ட வந்தவர்கள் தந்த ஆயுதங்களும் தமிழ் மக்களை கொன்றொழிக்க, அவர்களுக்கு, அவர்களின் வழியிலேயே பதில் சொல்லத் துணிந்தே திலீபன், உண்ணா விரதம் , அஹிம்சை வழி என மகாத்மா காந்தி இவ்வுலக்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையை கையிலெடுத்தார்

நல்லூர் முருகன் ஆலயத்துக்கு முன்பாக 1987ஆம் ஆண்டு செம்படம்பர் 15ஆம்திகதி சாகும்வரையிலான உண்ணா விரதத்தை தொடங்கினார் திலீபன்.தன் தலைவர் பிரபாகரன் இந்த உண்ணாவிரதம் வேண்டாம் என்று சொல்ல,”நமது கொள்கையின் தீவிரத்தை நிரூபிக்க இதைவிட்டால் வேறு வழியில்லை. நாம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பதை ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் சொல்லவேண்டிய தருணம் இது. இன்னொரு ராணுவம் எங்கள் மண்ணில் நிலைகொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லவேண்டிய தருணம். அதையும் இந்தியாவின் வழியிலேயே சொல்ல உண்ணாவிரதம்தான் ஒரே வழி ” என்று பதில் சொன்னார் ,

ஆனால் திலீபனின் சாகும்வரையிலான உண்ணா விரதம் அஹிம்சை தேசத்து ஆட்சியாளர்களின் காதில் விழாததால், திலீபனின் 5 கோரிக்கைகளும் ஏற்கப்படாததால், காந்திய தேசம்தானே, காந்திய வழிப் போராட்டத்தை ஏற்பார்கள் என திலீபனும் தமிழ் மக்களும் கொண்டிருந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டதால், பன்னிரண்டாம் நாளான 26 ஆம் திகதி திலீபனின் சாகும்வரையிலான உண்ணாவிரதம் அவர் சாவிலேயே முடிவடைந்தது. அவ்வாறான ஒரு அஹிம்சைப் போராளியைத்தான் ,இன்னொரு நாட்டு இராணுவம் எமது நிலத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு சொட்டுத்தண்ணீர்கூட அருந்தாது பட்டினி கிடந்து தன் உயிரை துறந்த திலீபனைத்தான் ”பயங்கரவாதி” என்ற பட்டத்தை சூட்டி அவரை நினைவு கூர தற்போதைய ஆட்சியாளரான கோத்தபாய ராஜபக்ச அரசு மறுத்து தமிழர்களுக்கிருந்த ஒரேயொரு உரிமையான நினைவு கூரும் உரிமையையும் இப்போது ஒழித்து விட்டது.

தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கடந்த 30 வருட உரிமைப்போராட்டத்தில் தமது உறவுகளை இழந்தவர்கள் அந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் முறையற்ற வழக்குகளைப் பதிவு செய்து தடையுத்தரவுகளை பொலிஸார் மூலம் வழங் கியும் . வடக்கு கிழக்கு முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் தலைவர்கள்,வழக்கறிஞர்கள் எனப்பலருக்கு நீதிமன்ற அழைப்பாணைகளை அனுப்பியும் ஜனநாயக அடிப்படையுரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும்,மனிதாபிமான கடமைகளுக்கும் ஐ.நா. சாசன உடன்படிக்கைகளுக்கும் எதிராகவே கோத்தபாய அரசு செயற்படத்தொடங்கியுள்ளது. இந்த அரசில் இவ்வாறான நடவடிக்கைகள் தான் இனிமேல் தொடரப்போகின்றன.

எனினும் ”நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்பதுபோல் இந்த அரசின் இவ்வாறான அடாவடிகளும் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசிய அரசியல்கட்சிகளுக்கும்ஒருவகையில் நன்மையையே ஏற்படுத்தியுள்ளன.திலீபனை நினைவுகூரும் விடயத்தில் அரசின் இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை எதிர்கொண்டதால் தான் தமிழ்த் தேசியத்தைக் கொண்டியங்கும் பத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்துள்ளன. இவர்கள் கடந்த 18-09-2020 அன்று ஒன்று கூடி இழந்து போகும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் படி அனைவரும் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பினர். ஆனால் அதற்கு அரசு பதில் வழங்காததும் ஒரு நன்மையை ஏற்படுத்தியதுஅரசின் பதில் கிடைக்காததால் 28-09-2020அன்று அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகள் மற்றும் இறந்தோரை நினைவுகூரும் உரிமையை சட்ட உரித்தை நிலை நாட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் ஹர்த்தால் ஒன்றை பத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் அறிவித்தன.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அரச சார்பு உறுப்பினர்களின் தேர்தல் வெற்றியும், தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியத்தின் மீதிருந்த பற்றுறுதி குறைந்து வருகின்றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் அந்த வெற்றியை வைத்துக்கொண்டு அரச தரப்புக்களும் தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் புறக்கணித்து விட்டார்கள்,அவர்கள் உரிமை அரசியலைக் கைவிட்டு அபிவிருத்தி அரசியலுக்குள் வந்து விட்டனர் என்ற வகையில் சர்வதேச மட்டத்தில் தவறான பிரசாரத்தை முன்னெடுத்த நிலையில் இந்தக் ஹர்த்தால் அழைப்பும் தோல்வியடைந்துவிடும்,அதனை வைத்துக்கொண்டும் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை, தமிழ் தேசியக்கட்சிகளை புறக்கணித்து விட்டார்கள் என்ற பிரசாரத்தை முன்னெடுக்கலாம் எனக்காத்திருந்தவர்களுக்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுத்தனர்.

அகிம்சைவழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த திலீபனை நினைவு கூருவதற்கு கோத்தபாய அரசினால் தடைகள் விதிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த அரசின் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் ,பொது அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்த ஹர்த்தால் போராட்டத்துக்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பும் அதனால் முழு வெற்றியடைந்த ஹர்த்தாலும் தமிழினத்தின் தேசியத்தின் மீதான பற்றுறுதியை மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளது.அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்த ஹர்த்தால் போராட்டம் முழு வெற்றி யடைந்துள்ளமையும் அதற்கு வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய முழுமையான ஆதரவும் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில்தான் தொடர்ந்தும் பயணிக்கின்றார்கள் என்பதை மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. உணர்வு அரசியலுக்கும், தமிழ்த் தேசியத்திற்கு இனி வடக்கு, கிழக்கில் இடமில்லை என்று கூறியவர்களின் முகத்தில் தமிழ் மக்கள் கரி பூசியுள்ளனர்.தமிழ் மக்களின் மனங்களில் தமிழ் தேசிய உணர்வு தற்போதும் அதியுச்ச அளவில் இருக்கின்றது என்பதனை இந்த ஹர்த்தால் வெளிப்படுத்தியது.

கோத்தபாய ராஜபக்ச அரசில் இந்தக் ஹர்த்தால் எப்படியும் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். அதர்க்கான முழு முயற்சிகளில் நீதித்துறையும் பொலிஸ் துறையும் பல இடங்களில் படைத்தரப்பும் களமிறக்கப்பட்டபோதும் அனைத்து முயற்சிகளையும் தமது தமிழின உணர்வால் தோற்கடித்த வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் தமது தமிழ் தேசியத்தின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தி, அபிவிருத்தி மாயைகளுக்கு அடிபணியோம்,குற்றுயிராகக் கிடந்தாலும் எம் இன மானம் காப்போம் என்ற செய்தியை கூறினர்.அது மட்டுமன்றி தமிழ் தேசியக்கட்சிகளுக்கும், உங்கள் ஒற்றுமையின்மைக்கு நாம் வழங்கிய தண்டனையே பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள்.தமிழ் தேசியத்துக்காக நீங்கள் ஒன்றுபடுவீர்களேயானால் நாங்கள் உங்கள் பின்னால் நிற்போம் என்ற செய்தியையும் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

நல்லூர் முருகன் ஆலயத்துக்கு முன்பாக 1987ஆம் ஆண்டு செம்படம்பர் 15ஆம்திகதி திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்து எப்படி வடக்கு,கிழக்கு தமிழ் மக்களை ஓரணியில் திரள வைத்தாரோ அதே திலீபனுக்காகவே வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் கடந்த 28 ஆம் திகதி ஓரணியில் திரண்டு தமது தமிழ் தேசிய உணர்வை,ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே தமிழ் தேசிய உணர்வு தமிழ் மக்களிடம் மங்கிப்போகவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக்கட்சிகளிடம் அது எந்தளவுக்குள்ளது என்பதே இன்றுள்ள கேள்வியாகும். நீங்கள் ஒன்று சேர்ந்தால் நாங்கள் உங்கள் பின்னால் நிற்போம் என்பதனை தமிழ் மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் திலீபனுக்காக ஒன்று சேர்ந்த இந்த 10 தமிழ் தேசியக்கட்சிகளினதும் பொது அமைப்புக்களினதும் ஒற்றுமை ,ஒன்றுபட்டு செயற்படும் பக்குவம் தொடருமா அல்லது திருமண வீட்டுக்கு ,மரண வீட்டுக்கு ஒன்று சேர்ந்து விட்டு பின்னர் கலைந்து செல்வது போல் நடந்து கொள்வார்களா என்ற கேள்வியும் சந்தேகமுமே மேலெழுந்துள்ளது.

10 தமிழ் தேசியக்கட்சிகளினதும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. தற்போது அமைந்துள்ள கோத்தபாய ராஜபக்ச அரசு பதவிக்கு வந்த பின்னர் தமிழ் மக்களுடைய சுதந்திரமான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த அடக்குமுறைகளின் ஊடாக தமிழ் மக்களை ஒரு அடிமைத்தனத்துக்குள் வைத்துக்கொள்ளும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் ஜனநாயக முறையிலான போராட்டங்களையும் நினைவுகூருதல்களையும் வழிபாட்டு உரிமைகளையும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தையும் இல்லாதொழித்து ,அடிப்படை உரிமைகளைப் பறித்து தமிழ் மக்களை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றது.அத்துடன் சர்வாதிகாரத்துக்கான 20 ஆவது அரசியலமைப்புத்திருத்தம், 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் ஒழிப்பு,புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என நீண்டதொரு குடும்ப ஆட்சிக்கான முனைப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை என்ற முனைப்பு ஏற்படாவிட்டால் தமிழினமே சர்வ நாசமாகிவிடும்.

முக்கியமான பிரச்சினைகளில்கூட தமிழ் தேசியக் கட்சிகளிடையே உள்ள ஒற்றுமையின்மையே தமிழர் தரப்பின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணமாகவுள்ளது. ஒரே கருத்து கொண்டுள்ள கட்சிகள், தேர்தல்களிலும் போராட்டங்களிலும் கூட நவக்கிரகங்களைப் போல ஆளுக்கொரு திசையில் நிற்கின்றன.இதனாலேயே அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களைக் கூட அரசுக்கு கொடுக்க முடியாத நிலைமையு ள்ளது. தற்போது தமிழ் தேசியக்கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள பிளவுகள் அண்மைய பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களில் வீழ்ச்சியையும் பலவீனத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை பாராளுமன்றத்தேர்தலில் வடக்கு,கிழக்கில் அரச தரப்பு பெற்றுக்கொண்ட வெற்றி அடுத்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கட்சிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்

எனவே திலீபனின் விடயத்தில் தமிழ் தேசியக் கட்சிகளிடையில் ஏற்பட்ட ஒற்றுமை, இணக்கப்பாடு,எதிர்வரும் மாகாண சபைக்கான தேர்தலிலும் தொடருமாக இருந்தால் வடக்கு மாகாண சபையுடன் கிழக்கு மாகாண சபையும் இலகுவாகக் கைப்பற்ற முடியும். இந்த வெற்றிக்காக இக்கட்சிகள் பெரிதாக ஒன்றையும் இழக்கத்தேவையில்லை . சில விட்டுக்கொடுப்புக்களும் புரிந்துணர்வும் இருந்தால் மட்டும் போதும். ஆயுதப்போராட்டத்தின் மூலம் கிடைக்காத வடக்கு,கிழக்கின் ஆட்சியை அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

  • தாயகன்