கோப் குழு ஒக்டோபர் மாதம் 05 நாட்கள் கூடும்

200 0

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இதற்கமைய ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை 06 நாட்கள் கோப் குழு கூடவுள்ளது.

வரையறுக்கப்பட்ட ‘லங்கா கோல் கம்பனி பிரைவட் லிமிடெட்’ கோப் குழுவின் முன்னிலையில் முதலில் அழைக்கப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை நுரைச்சோலை மின்நிலையத்துக்காக லங்கா கோல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்முதல் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதன் அதிகாரிகள் ஒக்டோபர் 06ஆம் திகதி பிற்பகல் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், லக்விஜய மின்நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற சூழல் பாதிப்புக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்து ஒக்டோபர் 08ஆம் திகதி கோப் குழுவில் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இதற்கிடையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் சாத்தியக்கூற்று ஆய்வு மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையை பரிசீலிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் முகாமைத்துவப் பிரிவு ஆகியன எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், களனி கங்கையில் நீர் மாசடைந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சூழல் கணக்காய்வு அறிக்கை குறித்துக் கலந்துரையாடுவதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை முதலீட்டுச் சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியனவும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக ஒக்டோபர் 23 ஆம் திகதி தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது. தென்னை பயிர்ச்செய்கை அதிகாரசபை, தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிலையம் ஆகியன அன்றையதினம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.