இலங்கை சிங்கள மக்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல – கஜேந்திரகுமார்

236 0

இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு இலங்கை பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்துள்ள அவர், “உண்மையில் தமிழர்களை பொறுத்தவரை இலங்கையின் அரசியலமைப்புக்கள் எதுவும் தமிழர்களுக்கு ஒரு போதும் நேர்மையாக இருந்திருக்கவில்லை.

இந்த நாட்டில் நிறைவேறிய, பெரும்பான்மைத்துவ வாதத்தை மையப்படுத்திய மூன்று ஒற்றையாட்சி அரசியலமைப்புகளுமே அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஜனநாயக மீறலாகவேதான் அமைந்திருந்தன.

இந்த அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படுத்தப்பட்ட 17ஆம் 19ஆம் திருத்தச் சட்டங்கள் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் உண்மையான நடைமுறையில் தமிழர்களுக்கு எதுவித நீதியும் ஜனநாயகப் பாதுகாப்பும் அதன் மூலம் கிடைத்திருக்கவில்லை என்பது தான் யதார்த்தம்.

கடந்த 72 வருடமாக எண்ணிக்கையில் சிறிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ச்சியாக பறித்து பழக்கப்பட்டு வந்த சிங்கள அரசுகள், தற்போது இந்த 20ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் எதுவித கூச்சமும் இன்றி தனது சொந்த மக்களின் ஜனநாயக உரிமைகளிலேயே கை வைக்க தொடங்கியிருக்கிறது.

தற்போது உங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றபோது அதற்கு எதிராக நாமும் உங்களுடன் இணைந்து குரல்கொடுக்க முன்வந்துள்ளோம்.

மேலும் 20ஆம் திருத்ததுக்கு எதிரான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதுடன், அதற்கான எமது பூரண ஆதரவையும் இத்தால் வெளிப்படுத்துகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.