‘மெஸன்சாட்’ கியூப் செயற்கைக்கோள் முதல் சிக்னலை அனுப்பியது

30 0

அமீரகத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ‘மெஸன்சாட்’ கியூப் செயற்கைக்கோள் ரஷியாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது நேற்று அந்த செயற்கைக்கோள் தனது முதல் சிக்னலை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.

அபுதாபி கலீபா பல்கலைக்கழகம் மற்றும் ராசல் கைமா அமெரிக்க பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் கூட்டு முயற்சியில் ‘மெஸன்சாட்’ எனப்படும் சிறிய கியூப் வகை செயற்கைக்கோளானது கலீபா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. கியூப் வகையிலான இந்த சிறிய செயற்கைக்கோள் நேற்று முன்தினம் ரஷியாவின் பிளஸ்டெக் காஸ்மோட்ராம் தளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

‘சோயுஸ் 2 பி’ என்ற ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளுடன் மேலும் 18 நானோ செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டில் இருந்து நேற்று நள்ளிரவு இந்த செயற்கைக்கோள் விடுவிக்கப்பட்டு வெற்றிகரமாக பூமியில் இருந்து 565 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளின் செயல்பாடுகளை அபுதாபி கலீபா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் ஆய்வுக்கூட கட்டுப்பாடு அறை மற்றும் ராசல் கைமா அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தரைக்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நேற்று அதிகாலை சரியாக அமீரக நேரப்படி 1.41 மணிக்கு ராசல் கைமாவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தனது முதல் சிக்னலை இந்த செயற்கைக்கோள் அனுப்பியுள்ளது. இதனை அடுத்து அந்த மையத்தில் உள்ள நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த மையத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் அப்துல் ஹலிம் ஜலாத் கூறியதாவது:-

‘மெஸன்சாட்’ வெற்றிகரமாக விண்ணில் பறந்து கொண்டுள்ளது. அதிகாலையில் அதன் முதல் தகவல் பெறப்பட்டுள்ளது. அந்த தகவலில் அதன் பேட்டரிகள் நல்ல நிலையில் உள்ளதை காட்டியுள்ளது. தொடர்ந்து அதன் சிக்னல்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்த செயற்கைக்கோள் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்பன் உள்ளிட்ட வாயுக்களின் அளவு மற்றும் நச்சுத்தன்மைகளை ஆராய்ச்சி செய்து தகவல்களை சேகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.