சிறிலங்காவில் மீண்டும் ஒரு வன்முறை அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது – ஐக்கிய மக்கள் சக்தி

253 0

சிறிலங்காவில் மீண்டும் ஒரு வன்முறை அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிய நிகழ்வில் அடையாளம் தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது.

அந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறித்த விடயத்தை கூறினார்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குழுவை உடனடியாக கைது செய்து இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ் மா அதிபரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்படுவதாகவும், பயங்கரவாத குழுக்களும் ஆயுதங்களை எடுத்துள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அத்தோடு இதுபோன்ற சம்பவங்கள் அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் மூலம் ஒரு சுயாதீன அமைப்பான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினை ஒழித்ததன் விளைவாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே வன்முறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஜனநாயக முறையில் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும் ஜனாதிபதிக்கு ரஞ்சித் மத்தும பண்டார அழைப்பு விடுத்தார்.

இல்லையென்றால், இது தொடர்பாக எதிர்க்கட்சி எந்த நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, இதுபோன்ற தாக்குதல்களின் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியை அடக்க முடியாது என தெரிவித்தார்.