ஆட்சிக்கு வந்தவர்கள் சரியானவைகளை நீக்குகின்றார்கள்

334 0

அரசிலமைப்பை முழுமையாக மாற்றியமைத்து, அதனை தங்களுக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய ஆட்சியாளர்களிடம் மேலோங்கியுள்ளது. “அரசியலமைப்பிலுள்ள பிழையான விடயங்களை திருத்துவோம்” என தேர்தல் காலத்தில் பிரசார மேடைகளில் முழங்கினார்கள். ஆனால், அவசியமான சரியான சட்டவிதிகளைக் கூட நீக்கிவிட்டு, 1978ஆம் ஆண்டின் ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியலமைப்பை போன்றே முழு அதிகாரமும் ஜனாதிபதியின் கைகளில் உள்வாங்கப்படும் விதத்திலான சட்ட திருத்தமே தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜே.எம்.சித்திக் எழுதிய ‘தப்புக் கணக்கு’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா மடவளை மதீனா மத்திய கல்லூரி அஷ்ரப் மண்டபத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர்; மேலும் தெரிவித்ததாவது,

இன்று முஸ்லிம் சமூகம் சம்பந்தமான தேவையற்ற தப்பபிப்ராயங்களுக்கு மத்தியில் சரியான புரிந்துணர்வின்மையால் ஏராளமான புரளிகளுக்கு நாங்கள் முகம் கொடுத்து வருகின்றோம். அவை கலவரங்களாக வெடித்து மிகப் பெரிய அனர்த்தங்களை ஏற்படுத்திய சூழலில் வாழ்ந்து வருகின்றோம்.

இந்தப் பின்னணியில் என்னுடைய புத்தகமொன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டேன். அந்நூலின் “முஸ்லிம்கள் தொடர்பான தவறான எண்ணங்களை களைவதற்கான ஒரு முயற்சி” என்பது தான் அதன் உப தலைப்பின் உள்ளர்த்தமாகும். அதனடிப்படையில் முஸ்லிம்கள் பற்றிய பிற சமூகத்தவர்களின் தவறான புரிதல்கள் குறித்த கண்ணோட்டத்தை நீக்கி, உண்மையான யதார்த்தபூர்வமான அணுகுமுறையை அந்நூலில் நான் கையாண்டுள்ளேன்.

இக்கருத்தை மேற்கோள் காட்டி பிராந்திய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி இருக்கின்ற பிரச்சினைகளின் பின்புலத்தை வைத்து என்னால் இயன்றளவில் ஆழமான ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தேன். அதனை தமிழிலும், சிங்களத்திலும் விரைவில் வெளியிடவுள்ளேன். முக்கியமாக, சிங்கள சமூகத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட ஓர் ஆய்வு நூல் என்ற வகையில் அதனை சிங்கள மொழி மூலம் வெளியிடுவதற்கான அவசியத்தை என்னிடம் அனேகர் வலியுறுத்தியிருக்கின்றனர்.

அண்மைக் காலமாக நாங்கள் ஒரு பேசு பொருளாக மாறிவருகின்றோம். என்ன செய்யப் போகின்றோம் என்பது தேர்தலில் எனக்கு வாக்களித்தவர்களுக்குக் கூட, புரியாத புதிராகத்தான் இருந்து வருகின்றது.

பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் புதிய ஆட்சியாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார், அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலில் எவரும் எதிர்பார்க்காத விதத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த ஆசன சமன்பாடு உருவாகியுள்ளது.

இத்தகைய சூழலில் அரசிலமைப்பையே மாற்றியமைத்து, அதனை தங்களுக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய ஆட்சியாளர்களிடம் மேலோங்கியுள்ளது. “அரசியலமைப்பிலுள்ள பிழையான விடயங்களை திருத்துவோம்” என தேர்தல் காலத்தில் பிரசார மேடைகளில் முழங்கினார்கள். ஆனால், அவசியமான சரியான சட்டவிதிகளைக் கூட நீக்கிவிட்டு 1978ஆம் ஆண்டின் ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியலமைப்பை போன்றே முழு அதிகாரமும் ஜனாதிபதியின் கைகளில் உள்வாங்கப்படும் விதத்திலான சட்ட திருத்தமே தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான விடயமல்ல. இவ்வாறான நியாயமல்லாத விடயத்திற்கு நாங்களும் ஆதரளவளிக்க வேண்டுமென்ற அழுத்தம் வந்த வண்ணமேவுள்ளது. மடவளையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் உங்களுடைய விருப்பு வாக்குகளை எனக்கு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

உங்களது வாக்குகளை என்ன எதிர்பார்ப்போடு எனக்கு அளித்தீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாமல் எதிர்வரும் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தம் தொடர்பில் கரிசனை கொண்டு தற்போது தோன்றியுள்ள நெருக்கடியான கட்டத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. இந்த அரசியலமைப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. நானும் மனுத் தாக்கல் செய்து அந்த வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடவுள்ளேன்.

நாங்கள் ஆதரவளித்தாலும், ஆதரவளிக்காது விட்டாலும் ஆட்சியாளர்கள் இத்திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ளும் சாத்தியப்பாடுகள் உள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் கட்சிக்குள்ளும், பாராளுமன்றத்திற்குள்ளும்; இருக்கின்ற பலரும் சிறிது அவதிப்படுகின்றார்கள். இவர்களின் இந்த ஆட்சி நீடிக்குமானால் என்ன செய்வதென சங்கடப்பட்டு அவர்கள் ஒருவிதமான தடுமாற்றத்தில் இருக்கின்றனர்.

இதற்கு மத்தியில் நாட்டையும், ஜனநாயக்தையும், எமது சமூகத்திருக்கின்ற நன்மதிப்பையும் பாதுகாத்துக்கொண்டு இந்ந இக்கட்டான நிலைமையிலிருந்து விடுபடுவதற்கான உபாயத்தை உரிய முறையில் கையாள்வது எப்படி என்பது தான் இன்று எங்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினையாகும்.

எனவே, அவற்றை இயன்றவரை சாமர்த்தியமாகவும், சாணக்கியமாகவும், அதேவேளையில், தேவை இல்லாத பகையை தேடிக்கொள்ளாமலும் புத்திசாலித்தனமாக காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்; ரமீஸ் அப்துல்லாஹ், நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவலர் முத்தையா ஸ்ரீகாந்தன், அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்க தேசிய தலைவர் சஹீத் எம்.ரிஸ்மி, அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்கத்தின்; மடவளை கிளையின் தலைவர், பிரதேச சபை உறுப்பினர் வை.எம்.எம்.ரியாஜ், கலாநிதி பௌசில் ரசீன், எழுத்தாளர் மாத்தளை பீர் முஹம்மட் ஆகியோர் உட்பட அநேகர் கலந்துகொண்டனர்.