மைதிரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அடுத்த மாதம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைகுழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மைத்ரிபால சிறிசேனாவை எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதியும் ரணில் விக்ரமசிங்கவை ஒக்டோபர் 6 ஆம் திகதியும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறும் அதற்கு சலுகைகளை மைத்ரிபால சிறிசேன அறிவித்தார் என்றும் கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்டது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கடந்த வாரம் இடமபெற்ற ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இருப்பினும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று இராஜினாமா செய்தால், பல சலுகைகளை வழங்குவதாக தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
அத்தோடு தனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி இந்த விடயம் குறித்து சாட்சியமளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

