திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது

329 0

அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒளிப்படம் ஒன்று உண்டு. அதில் அரைக் கால்சட்டை அணிந்த ஒரு போலீசார் வீதியில் விழுந்து கிடக்கும் ஒரு சத்தியாகிரகியின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் காணப்படும் சத்தியாகிரகி அரசையாதான்.

அவரை 1990களின் தொடக்கத்தில் ஒரு தேவைக்காக நான் சந்தித்தேன். அப்போது கேட்டேன் “தமிழரசுக்கட்சி உண்மையாகவே சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதா? காந்தி கூறிய சத்யாகிரகி ஒருவருக்கு இருக்கக்கூடிய எல்லா அம்சங்களும் தமிழரசுக்கட்சியின் சத்தியாக்கிரகிகள் என்று அழைக்கப்பட்டவர் களிடம் இருந்தனவா?” என்று.

அதற்கு அரசையா பின்வரும் தொனிப்பட பதில் சொன்னார்… “போராட்டத்தில் ஈடுபட்ட நாங்கள் எல்லாரும் உண்மையாகத்தான் அதில் இறங்கினோம். ஆனால் எங்களில் எத்தனை பேர் அதில் தொடர்ச்சியாகப் போராடி உயிரைத் துறக்க தயாராக இருந்தார்கள்  என்ற கேள்வி இங்கு முக்கியமானது. நாங்கள் சத்தியாக்கிரகத்தை உயிரை துறக்கும் ஓர் உச்சம் வரை முன்னெடுக்கவில்லை. முன்னெடுக்கத் தயாராக இருக்கவில்லை. அது சாகத் தயாரானவர்களின் போராட்ட வழிமுறையாக இருக்கவில்லை. மாறாக அது சாகப் பயந்தவர்கள் புகலிடமாகவே இருந்தது. திலீபனை போலவும் இப்போதுள்ள ஆயுதப் போராளிகளைப் போலவும் ஒரு 500 பேர் அன்றைக்கு எங்களோடு நின்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். இப்படி ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு தேவையே இருந்திருக்காது. எங்களுடைய தலைமுறையே போராடி முடித்திருக்கும்” என்று.

தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரகிகளுக்கும் திலீபனுக்கும் அன்னை பூபதி க்கும் இடையில் உள்ள வேறுபாடு அதுதான். தமிழ் மிதவாதிகளுக்கும் காந்திக்கும் இடையில் இருந்த வேறுபாடும் அதுதான்.

காந்தியை பொறுத்தவரை அகிம்சை ஒரு வாழ்க்கை முறை அது சாகத் துணிந்தவனின் போராட்ட வழிமுறை. அதற்காக உயிரைத் துறக்க காந்தி தயாராக காணப்பட்டார். அதற்காக முதலில் உயிரைத் துறக்க அவர் தயாராக இருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சியின் அகிம்சை போராட்டம் அப்படி அல்ல. அது சாகத் துணிந்தவர்களின் ஆயுதமாக அல்ல. சாகப் பயந்தவர்களின் உத்தியாகவே கையில் எடுக்கப்பட்டது. அதனால் அந்தப் போராட்டத்தை ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் முன்னெடுக்க முடியவில்லை. அரசாங்கம் குண்டர்களின் மூலமும் காவல்துறையின் மூலமும் தமிழரசுக் கட்சியின் அகிம்சைப் போராட்டங்களை ஒடுக்கிய பொழுது அதற்கு அடுத்த கட்டம் என்ன என்பதைக் குறித்து ஒரு தெளிவான வரை வழி வரைபடம் கட்சியிடம் இருக்கவில்லை. ஏனெனில் அக்கட்சி அந்தப் போராட்டத்தை விசுவாசமாக முழு அர்ப்பணிப்போடு முன்னெடுக்கத் தயாராக இருக்கவில்லை. அதாவது எத்தகைய தியாகத்துக்கும் தயாராக இருக்கவில்லை. தமது அறவழிப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியாத  ஒரு குழப்ப  நிலையில் தமிழரசுக் கட்சி அப்போராட்த்தை அரசாங்கமே குழப்பட்டும்  என்று எதிர் பார்த்ததாகவும் ஒரு விமர்சனம் உண்டு.

இதுதான் பிரச்சினை. இப்படிப்பட்ட ஒரு வரலாற்றுப் பின்னணியில் திலீபன் சாகத் தயாராக இருந்தார். அன்னை பூபதி சாகத் தயாராக இருந்தார். திலீபன் ஒரு காந்தியவாதி அல்ல. பலர் அவரையும்  காந்தியையும் ஒப்பிட்டுக் குழப்புவது உண்டு. அது தவறு.

காந்தி வேறு. திலீபன் வேறு. அன்னை பூபதி வேறு.

காந்தியைப் பொறுத்தவரை அகிம்சை ஒரு வாழ்க்கை முறை. அது ஒரு ஆன்மீகப்பயிற்சி  மட்டும் அல்ல. ஒரு மக்கள் கூட்டம் தங்கள் விடுதலையை வென்றெடுப்பதற்கான அரசியல் செயல் வழியும் கூட. புத்தரிடம் அகிம்சை ஒரு ஆன்மீக ஒழுக்கமாக இருந்தது. காந்தி அதை ஒரு அரசியல் ஒழுக்கமாக போராட்ட ஒழுக்கமாக பரிசோதித்தார். அவர் புத்தரையும்  கிறீஸ்துவையும் ரஷ்ய எழுத்தாளர் ட்ரோல்ஸ் ரோயின்  எழுத்துக்களையும் கலந்து தனது பரிசோதனையைச் செய்தார். தனது  வாழ்க்கையை “சத்திய சோதனை” என்றும் வர்ணித்தார். காந்தியைப் பொறுத்தவரை அகிம்சை தான் எல்லாம். அவர் அதற்காகச்  சாகும் உச்சம் வரை  போக தயாராக இருந்தார். தானே முதலில் சாகவும் தயாராக இருந்தார். என்பதனால்தான் அவர் “என்னுடைய வாழ்க்கையே என்னுடைய செய்தி” என்று கூற முடிந்தது.

திலீபன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர். அந்தப் போராட்டத்தில் தன் உயிரைத் துறக்கத் தயாராக இணைந்தவர். அவருடைய ஒழுக்கம் அகிம்சை அல்ல. ஆயுதப் போராட்டம் தான். ஆனால் அவர் உயிரிழந்தது அகிம்சை வழியில் போராடி. எனவே அவரை பொறுத்த வரையிலும் அகிம்சை ஒரு வாழ்க்கை முறை அல்ல. ஆயுதப் போராட்டம் தான் வாழ்க்கை முறை. எனவே  அகிம்சையின் வார்த்தைகளில் சொன்னால் திலீபனின் மரணம் தான் அவருடைய செய்தி. அதாவது அகிம்சையோ ஆயுதப் போராட்டமோ எதுவானாலும் அதில் உயிரை துறக்கும் உச்சம் வரை போகத்  தயாராக இருக்க வேண்டும் என்பதே திலீபனின் செய்தி.

அன்னை பூபதி இந்த இருவரில் இருந்து வித்தியாசமானவர். ஒருவிதத்தில் அவர் திலீபனின் அடிச்சுவடுகளை பின்பற்றினார். எனினும் அவருக்கென்று ஒரு தனித்துவம் உண்டு, அவர் ஒரு போராளியாக இருக்கவில்லை. தன் பிள்ளைகளை போருக்கு கொடுத்தார். அதன் விளைவாக ஓர் அரசியல் செயற்பாட்டாளராக மாறினார். அவருக்கு முன் போராடிய அன்னையர் முன்னணியைச் சேர்ந்த அன்னம்மா என்று அழைக்கப்பட்ட ஒரு பெண் போராட்டத்தை இடையில் கைவிட்டார். அதனால் போராட்டம் இடையில் தடுமாறத் தொடங்கியது. சர்ச்சைகளுக்கும் அபகீர்த்திக்கும் உள்ளாகியது. அந்த அபகீர்த்தியிலிருந்து பூபதி போராட்டத்தை மீட்டெடுத்தார். அவர் ஒரு குடும்பப் பெண். சாகத் தயாராக எந்த ஓர் இயக்கத்திலும் இணைந்தவர் அல்ல. எனினும் அவர் சாகத் துணிந்து உண்ணாவிரதம் இருந்தார். திலீபனை விடவும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான நாட்கள் அவர் உண்ணாவிரதமிருந்தார்.

ஒரு சாதாரண குடும்பப் பெண் எவ்வளவு உன்னதமான தியாகங்களைச் செய்ய முடியும் என்பதற்கு பூபதி ஒரு முன்னுதாரணம். அதைவிட முக்கியமாக வடக்கையும் கிழக்கையும் அவர் தனது பசியினாலும் தாகத்தினாலும் இணைத்தார். வடக்கையும் கிழக்கையும் இணைத்த அகிம்சா முன்னுதாரணம் அவர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னணியில் பிள்ளையானின் வெற்றியை முன்வைத்து பிரதேச உணர்வுகளை தூண்டும் விதத்தில் உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் பூபதியின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாக உணரப்படுகிறது. பூபதி உண்ணாநோன்பிருந்து வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர் என்ற அடிப்படையில் அவர் வித்தியாசமான ஒரு முன்னுதாரணம். அவருக்கு வேறு நிகரில்லை.

திலீபனும் பூபதியும் மிக எளிமையான கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதமிருந்தார்கள். குறிப்பாக திலீபன் முன்வைத்த அற்ப கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற முடியாத சமாதானத்துக்கு எதிராக தமிழ் மக்களின் உணர்வுகள் திரளத் தொடங்கின.அதன் மூலம் அப்போது நிலவிய சமாதானச் சூழலின் இயலாமைகளை அவர் அம்பலப்படுத்தினார். புலிகள் இயக்கத்துக்கும் இந்திய அமைதி காக்கும் படைக்கும் இடையிலான மோதலை நோக்கி தமிழ் கூட்டு உளவியலைத் தயாரித்ததில் திலீபனுடைய உண்ணாவிரதத்துக்குப் பங்குண்டு. இந்திய அமைதி காக்கும் படை தமிழ் பகுதிகளுக்குள் வந்தபோது ஆரத்தி காட்டி மாலை போட்டு வரவேற்ற ஒரு மக்கள் கூட்டத்துக்குள் இருந்து அதே படையை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

திலீபன் அன்னை பூபதி இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை தங்களுடைய லட்சியங்களுக்காக அவர்கள் உயிரைத் துறப்பதற்குத் தயாராக இருந்தார்கள் என்பதுதான். அரசியல் செயற்பாடு எனப்படுவது அர்ப்பணிப்பும் தியாகமும் சுய சித்திரவதையும் சுயசோதனைகளும் நிறைந்ததுதான் என்பதனை இரண்டு பேரும் நிரூபித்தார்கள்.

ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் அரசியல் அப்படிப்பட்டது அல்ல. நேர்மை துணிச்சல் அர்ப்பணிப்பு மிக்க அரசியல் வாதிகளை மிக அரிதாகவே காண முடிகிறது. மிகச் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் பிழைப்புவாதிகள் ; சுயநலமிகள்; நபுஞ்சகர்கள். அரசியலை ஒரு பிழைப்பாக பார்க்கிறவர்கள். தேசியத்தை ஒரு முகமூடியாக எடுத்து அணிந்து கொள்பவர்கள். நடிப்புச் சுதேசிகள்.

அவர்கள் அடிக்கடி போராட்டம் வெடிக்கும் என்று அறிக்கைகள் விடுவார்கள். ஆனால் நாட்டில் அப்படி எந்தப் போராட்டமும் கிடையாது. பாதிக்கப்பட்ட மக்கள் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் காணிகளுக்காகவும் போராடினார்கள்.போராடிக் கொண்டிருகிறார்கள்.

திலீபனை போல அன்னை பூபதியைப் போல அர்ப்பணிப்போடு போராட எத்தனை அரசியல்வாதிகள் தயார்? அவர்கள் சாகும் வரையெல்லாம்  உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். சின்னச் சின்னத் தியாகங்களையாவது செய்யலாம். தமக்குக் கிடைக்கும் சலுகைகளையும் சுகபோகங்களையும் துறக்கலாம். குறைந்தபட்சம் தமது வாக்குறுதிகளுக்கு நேர்மையாக வாழ்ந்து காட்டட்டும் பார்க்கலாம்.

நிலாந்தன்