கிராம மட்டங்களிலான கைத்தொழில் உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏற்பாடு- பிரசன்ன ரணவீர

228 0

கிராம மட்டங்களிலான கைத்தொழில் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக பிரம்புகள், பித்தளை, மட் பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்த அவர், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.

அத்துடன், பனையோலை சார்ந்த கிராமமாக பிரகடனப்படுத்தப்பட்ட பத்தினிபுரம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பனைசார் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டடத்தை பார்வையிட்டதுடன் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், கைத்தொழில் சார் மூலப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான போக்குவரத்துப் பிரச்சினைகளை விரைவில் நிவர்த்திசெய்து தருவதாக உறுதியளித்தார்.

மேலும், கிராம மட்டங்களில் முன்னெடுக்கப்படும் கைத்தொழிற்துறை உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தமது அமைச்சு மேற்கொள்வதாகவும் இதன் மூலமாக கிராம மட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.