தென்மேற்கு பருவமழையால் ஈச்சம்பாடி அணை நிரம்பியது: நிரம்பும் நிலையில் வாணியாறு அணை

256 0

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 8 அணைகள் உள்ளன. பாலக்கோடு வட்டத்தில் சின்னாறு (பஞ்சப்பள்ளி) அணை, மாரண்ட அள்ளி அருகே கேசர்குளி அணை, பென்னாகரம் வட்டத்தில் நாகாவதி அணை, நல்லம்பள்ளி வட்டத்தில் தொப்பையாறு அணை, பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் வாணியாறு அணை, அரூர் வட்டத்தில் வரட்டாறு(வள்ளிமதுரை) அணை, காரிமங்கலம் வட்டத்தில் தும்பல அள்ளி அணை, ஈச்சம்பாடி அணை ஆகியவை தருமபுரி மாவட்டத்தில் உள்ளன.

இவற்றில், ஈச்சம்பாடி அணை மட்டும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இதற்கான நீராதாரம் கர்நாடகா மாநில மலைப்பகுதிகளில் தொடங்கி தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் வரை தொடர்கிறது. இதர 7 அணைகளுக்கும் உள்ளூரில் அருகருகே உள்ள சிறியதும், பெரியதுமான மலைப்பகுதிகள் தான் நீராதாரம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் அதிக நீர் கொள்ளளவு கொண்ட அணை சின்னாறு (பஞ்சப்பள்ளி) அணை. இதன் நீர் கொள்ளளவு 500 மில்லியன் கனஅடி. இரண்டாவது பெரிய அணை வாணியாறு. இதன் நீர் கொள்ளளவு 418 மில்லியன் கனஅடி. மாவட்டத்திலேயே குறைந்த அளவு தண்ணீரை தேக்கி வைக்கும் வசதி கொண்ட அணை ஈச்சம்பாடி. இந்த அணையில் 37 மில்லியன் கனஅடி அளவு தண்ணீரை மட்டுமே தேக்கி வைக்க முடியும்.

தென்மேற்கு பருவமழைக் காலம் முடிவுறும் தருவாயில், மாவட்டத்தில் உள்ள 8 அணைகளில் ஈச்சம்பாடி அணை மட்டும் தற்போது முழுமையாக நிரம்பியுள்ளது. தென்பெண்ணையின் குறுக்கே அமைந்துள்ள இந்த அணையில் அதன் முழு கொள்ளளவான 17.35 அடி உயரத்துக்கு தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 23 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 23 கன அடி நீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

வாணியாறு அணையின் அதிகபட்ச நீர்மட்ட உயரம் 65.27 அடி. தற்போது அணையில் 49.36 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 17.65 கன அடி அளவுக்கு தண்ணீர் வருகிறது. அணையை ஒட்டிய சேர்வராயன் மலைத்தொடர்களில் அவ்வப்போது பெய்யும் மழைக்கு ஏற்ப இந்த அணைக்கான நீர்வரத்து நிலவரம் மாறுபடுகிறது. அணையில் தற்போது 61 சதவீதம் வரை நிரம்பியுள்ள நிலையில் விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது. 50.18 அடி உயரம் கொண்ட தொப்பையாறு அணையும், 14.76 அடி உயரம் கொண்ட தும்பல அள்ளி அணையும் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகின்றன.

தென்மேற்கு பருவமழைக் காலம் இன்னும் 2 வாரம் நீடிக்கும். அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பர் வரை இருக்கும். மீதமுள்ள மழைக்காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் கணிசமான அளவு நீர்மட்டம் உயரும் வகையில் மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையின் நீராதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட அணைகளில் படிப்படியாக உயர்ந்து வரும் நீர்மட்டம், விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.