திருச்சி பாரதிதாசன் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தனி வழி

13 0

திருச்சி பாரதிதாசன் சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கென்று தனிவழி விடப்பட்டு மஞ்சள் நிறகோடு போடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது.தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் (பைபாஸ்) மட்டுமே இருசக்கர வாகனங்கள் செல்வதற்கென்று சாலையின் ஓரமாக 1 மீட்டர் இடைவெளி விட்டு வெள்ளைநிற கோடு வரையப்பட்டிருக்கும். அதே போன்று திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சோதனை முறையில் இருசக்கர வாகனங்களுக்கென்று தனிவழி (டிராக்) ஏற்படுத்தப்படும் என சமீபத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.

அதன்படி, திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாரதிதாசன் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தனிவழி போடப்பட்டு வருகிறது. அதாவது தார்சாலையில் மையப்பகுதியை ஒட்டி மஞ்சள் நிறகோடு போட்டு தனிவழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அந்த வழியில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற சரியான அறிவுறுத்தல் இல்லாத காரணத்தால், அது இருசக்கர வாகனம் மட்டுமல்லாது கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் செல்கிறது. சில இடங்களில் சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், தனிவழியை உபயோகப்படுத்த முடியாது சாலையின் மத்திய பகுதியிலேயே இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

இது குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான தனிவழி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அன்றைய தினத்தில் இருந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இருசக்கர வாகனங்கள் அந்த வழியை தவிர, வேறு பாதையில் சென்றாலோ அல்லது ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இருசக்கர வாகனங்களுக்கான தனிவழியில் வந்தாலோ அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

இது குறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், இருசக்கர வாகனங்களில் வருவோர் சிலர், அவசர வேலையாக வேகமாக செல்லவேண்டி, தனிவழியை விடுத்து சாலையின் நடுவிலேயே செல்லக்கூடும். எனவே, கூடுதலாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தவே இது வழிவகுக்கும். மேலும் இது ஒன்றும் தேசிய நெடுஞ்சாலைபோல, பக்கவாட்டில் தனிவழி ஏற்படுத்தவில்லை. சாலையை 3 ஆக பிரித்து சில இடங்களில் இருசக்கர வாகனங்கள் 2-வது வழித்தடத்தில் செல்வதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையானது இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல சாத்தியப்படுமா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது என்றார்.