கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் காவடி எடுத்து வந்து மனு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகி

236 0

கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு காவடி எடுத்து வந்த காங்கிரஸ் நிர்வாகி, யூரியா உரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை மற்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி வாசகங்களுடன் மனு கொடுத்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலு சாமி.

இவர் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு காவடி எடுத்து வந்து, அதில் யூரியா உரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை மற்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி வாசகங்களுடன் மனு கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கும் முன்பே யூரியா மூட்டைகளில் 5 கிலோ எடை குறைவாக உள்ளது என மனு வழங்கினேன்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சிலர் சட்டத்துக்கு புறம்பாக உரம் பதுக்கலில் ஈடுபடுகின்றனர் என மனு வழங்கினேன். இதற்கு பதில் அளித்துள்ள வேளாண்மை அதிகாரிகள், தேவையான அளவு உரம் கையிருப்பு உள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் உரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஆனால் 3 மாவட்டங்களிலும் முறைகேடாக உரம் பதுக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி பயணியர் விடுதி முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.