20ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 11ஆவது நாளை கடந்து இலக்கு நோக்கி விரைகின்றது.

303 0

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 45ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 20ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 11ஆவது நாளை கடந்து இலக்கு நோக்கி விரைகின்றது.

21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மூலம் சிங்கள பேரினவாத அரசினை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி தமிழர்களுக்கு நிலையான தீர்வினை பெறும் வண்ணம் மனித நேய ஈருருளிப்பயணம் இம்முறை ஐ.நாவின் 45 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் சென்ற 04.09.2020 அன்று பெரு மக்கள் எழுச்சியோடு ஆரம்பித்தது.

தொடர்ச்சியாக 11 வருட கால நீடிப்பின் மூலம் தமிழர்களின் மன உறுதியினை சிதைத்து சோர்வுறும் நிலையினை உருவாக்கி விடலாம் என எதிரியானவன் செயற்பட்டுவருகின்றான். இருப்பினும் அனைத்துலக வாழ்தமிழர்கள் தொடர்ந்தும் எமக்கு இழைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பினை சர்வதேச மட்டத்தில் குரல் உயர்த்தி பேசிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த வகையில் மனித நேய ஈருருளிப்பயணத்தில் ஈடுபடுவர்கள் சென்ற 04.09.2020ம் திகதி நெதர்லாந்தின் வெளிவிவகாரத் துறையின் தெற்காசிய பசுவிக் பிராந்தியத்தியத்தின் பொறுப்பதிகாரிகளுடனும், அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்கள். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களில் முக்கிய சரத்துக்களை சிறீலங்கா அரசு நிறைவேற்றாது சர்வதேச மட்டத்தில் இருமுகம் காட்டி நாடகம் நடத்தி வருவதையும் தொடர்ச்சியாக தமிழர் பிராந்தியத்தில் திட்டமிட்ட சிங்களமயமாக்கல், இளையோர்களின் கல்வியினை சிதைத்து போதைப் பழக்கங்களுக்கு அடிமையாக்குவது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய தொடர் போராட்டத்தினை கண்டு கொள்ளாது மற்றும் ஐ.நாவின் பரிந்துரைகளில் இருந்து தன் அனுசரணையினை விலக்கிக் கொள்வதாக சிறீலங்க அரசு அறிவித்ததனையும் குறித்து மற்றும் பல முக்கிய அம்சங்களோடு அரசியற் சந்திப்புக்கள் விரிவடைந்தன.

அதன் நிறைவாக, சர்வதேசப் பொறிமுறைகளில் இருந்து எப்போதும் சிறிலங்கா அரசு தான்தோன்றித் தனமான போக்கோடு நடந்து கொள்ள முடியாது எனவும் நிச்சயம் தமிழர்களுக்கான நீதி கிடைக்க தாங்களும் செயற்படுகின்றோம் எனவும் மற்றும் பல நம்பிக்கை உறுதிகளும் அரசியற் சந்திப்பின் நிறைவில் வாக்குறுதிகளாக கிடைக்கப்பெற்றன.

அவற்றினைத் தொடர்ந்து பெல்சியம் வாழ் தமிழ் மக்களின் எழுச்சிமிகு வரவேற்போடு நெதர்லாந்து மற்றும் பெல்சிய நாட்டின் பொறுப்பாளர்களினால் வாழிட நாட்டு தேசியக் கொடிப் பரிமாற்றத்தோடு மனித நேய ஈருருளிப்பயண போராளிகள் பெல்சியம் நாட்டினுள் நுழைந்து அன்வேர்ப்பன் மாநகரசபையினை வந்தடைந்தார்கள்.

07.09.2020 அன்று அன்பேர்ப்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும் பொதுமக்களுக்கான நினைவுக்கல்லறையில் இருந்து அகவணக்கத்தோடு பெல்சியத் தலைநகர் புருசலினை சென்றடைந்தார்கள். தொடர்ச்சியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தின் ஊடாக மக்கள் எழுச்சியோடு எமக்கு இழைக்கப் பட்ட இனவழிப்பிற்கு நீதி கேட்டு பன்னாட்டு மக்கள் அறியும் வண்ணம் கோசங்கள் எழுப்பப்பட்டன.

சம நேரம் பன்னாட்டு ஊடகங்களின் செய்தி ஆக்கங்களோடு கொடிய தொற்று நோய் கால கட்டத்தின் சட்ட விதிமுறைக்கேற்ப தமிழின அழிப்பின் ஆதாரங்கள் தாங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“போராட்ட வடிவங்கள் மாறலாம் , நாம் கொண்ட இலட்சிய நோக்கம் என்றும் மாறாது” என்னும் தேசியத் தலைவரின் கூற்றுக்கு இணங்க மனித நேய ஈருருளிப்பயணப் போராளிகளால் பெரும் விடுதலைச் செய்தி சர்வதேச அரசியல் மட்டம் எங்கும் பறைசாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. எவ்விடர் வரினும் தளராத துணிவோடு போராடிய மாவீரர்கள் மற்றும் பொது மக்களின் தியாகமே இன்றும் இவர்களின் போராட்ட உறுதியினை உயிர்ப்போடு வைத்திருக்கின்றது.

குறிப்பாக , தமிழீழத் தேசியக் கொடி தாங்கிய ஈருருளி ஐரோப்பிய நாடுகள் ஊடாக காடு ,மலை , மழை, குளிர் என பெரும் சவால்களுக்கு மத்தியில் பயணிக்கும் போது அரசியற் சந்திப்புகளின் பலனாக கிடைக்கும் நம்பிக்கை வாக்குறுதிகளே மேலும் உற்சாகப் படுத்தி இவர்களை விடுதலை நோக்கி பயணிக்க வைக்கின்றது. அந்த வகையில் தொடர்ச்சியாக புருசல்சில் இருந்து கெக்கெல்பேர்க், வாத்தர்லூ, வான்சு, அந்தீச்னெச், பொசுத்தொன், அத்தேர், இறுதியாக அர்லோன் மாநகரங்களில் முதல்வர்கள் மற்றும் ஐரோப்பிய , பெல்சிய பாராளுமன்ற உறுப்பினர்களினையும் சந்தித்து லுக்சாம்பூர்க் நாட்டினை கடந்து அங்கே முக்கிய அரசியல் மையங்களில் சந்திப்புக்களை மேற்கொண்டு யேர்மனி நாட்டின் எல்லையினை கடந்து தன் பாதை அனைத்துமே அரசியல் மையங்களினை இலக்காக வைத்தே பயணிக்கின்றது.

மேலும் உறுதியோடு பிரான்சு நாட்டினுள் உள்நுளைந்து சார்குமின் மாநகர சபையில் முதலாவது சந்திப்போடு ஊடகங்களுடனான உரையாடலும் இடம்பெற்று தொடர்ச்சியாக சார் யூனியன் , மாநகர சபையில் முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டு நாளை 15.09.2020 செவ்வாய் அன்று தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் முதலாவது உண்ணா நோன்பின் ஆரம்ப நாளில் Starsbourg மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் Starsbourg மக்களின் எழுச்சியோடு பி.ப 4 மணிக்கு நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் மனித நேய ஈருருளிப்பயண போராளிகளும் சங்கமிக்க இருக்கின்றனர்.

எனவே, அனைத்து Starsbourg வாழ் தமிழ் மக்களையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம். (தற்போதுள்ள சுகாதார ஒழுங்கு முறைகளை கடைப்பிடித்து)

தொடர்ச்சியாக செலச்றாட், கொல்மார், முலூசு, சன் லூயீ ஆகிய மாநகர சபைகள் நோக்கி பிரான்சு நாட்டில் அரசியற் சந்திப்பின் ஊடாக பயணித்து எதிர்வரும் 17.09.2020ம் திகதி பி.ப 4 மணிக்கு சுவிசு நாட்டின் முதலாவது மாநகரமான Baselலினை வந்தடைந்து ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணம் விரைகின்றது.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.