5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
தமிழ்நாட்டின் சேலம் நகரில் மிகப்பெரிய இரும்பாலை இயங்கி வருகிறது. தற்போது இங்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் பொருட்கள் உருட்டாலையிலும், 3 லட்சத்து 64 ஆயிரம் டன் பொருட்கள் வெப்ப உருட்டாலையிலும், 1 லட்சத்து 80 ஆயிரம் டன் பொருட்கள் எக்கு உற்பத்தி கூடத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே துருப்பிடிக்காத எக்கு மூலம் மிக அகலமான தகடுகள் உற்பத்தி செய்யும் கூடம் இங்குதான் முதன் முதலில் தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சேலம் இரும்பாலையில் சுமார் 2,500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆலை நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதையடுத்து சேலம் இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்வதற்கு கொள்கை ரீதியாக மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
இந்த தகவலை பாராளுமன்றத்தில் நேற்று மத்திய உருக்குத் துறை ராஜாங்க மந்திரி விஷ்ணு தியோ சாய், உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் மூலம் தெரிவித்தார்.
அதில் அவர் கூறி இருந்ததாவது:-
இந்திய உருக்காலை ஆணையத்தின் கீழ் வரும் தமிழகத்தின் சேலம் இரும்பாலை மகாரத்னா (மிகப்பெரிய நிறுவனங்கள்) பட்டியலில் உள்ள நிறுவனம் ஆகும். இந்த ஆலை கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இந்திய உருக்காலை ஆணையம் ரூ.2,200 கோடி செலவில் இந்த ஆலையை நவீனப்படுத்தியும், விரிவாக்கம் செய்த பிறகும் கூட நஷ்டமே ஏற்பட்டு வருகிறது. எனவே சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்வது என கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.

