டேவிஸ் கோப்பை டென்னிஸ்: அர்ஜென்டினா அணி சாம்பியன்

319 0

201611290403028623_argentina-is-davis-cup-champion_secvpfடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது.டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது.

ஆண்கள் டென்னிஸ் அணிகளுக்கு இடையேயான முதன்மையானதாக கருதப்படும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் நடந்தது.

இதில் முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் மரின் சிலிச் (குரோஷியா) 6-3, 7-5, 3-6, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் 41-ம் நிலை வீரர் பெட்ரிகோ டெல்போனிஸ்சை (அர்ஜென்டினா) தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 38-வது இடத்தில் இருக்கும் ஜூயன் மார்டின் டெல்போர்டோ (அர்ஜென்டினா) 6-4, 6-7 (6-8), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் 20-ம் நிலை வீரர் இவோ கார்லோவிச்சை (குரோஷியா) வீழ்த்தினார்.

2-வது நாளில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் மரின் சிலிச்-இவான் டோடிச் (குரோஷியா) ஜோடி 7-6 (7-2), 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் ஜூயன் மார்டின் டெல்போர்டோ- லியாண்ட்ரோ மேயர் (அர்ஜென்டினா) இணையை சாய்த்தது. இதன் மூலம் குரோஷியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று முன்தினம் மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்டின் டெல்போர்டோ, மரின் சிலிச்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களை 6-7 (4-7), 2-6 என்ற கணக்கில் இழந்த ஜூயன் மார்டின் டெல்போர்டோ பின்னர் சுதாரித்து விளையாடி சரிவில் இருந்து மீண்டு அடுத்த 3 செட்களையும் 7-5, 6-4, 6-3 என்ற தனதாக்கி மரின் சிலிச்சுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 4 மணி 53 நிமிடம் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் கடைசி மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் பெட்ரிகோ டென்போனிஸ் (அர்ஜென்டினா) 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் இவோ கார்லோவிச்சை (குரோஷியா) சாய்த்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

1981, 2006, 2008, 2011-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட அர்ஜென்டினா அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. 2005-ம் ஆண்டு சாம்பியனான குரோஷியா தோல்வி கண்டதால் மீண்டும் சாம்பியனாகும் வாய்ப்பை மயிரிழையில் நழுவ விட்டது.