சிறிலங்காவில் தொலைபேசிகளை மலிவு விலையில் விற்பதாக தெரிவித்து மோசடி!

307 0

சிறிலங்காவில் புதிய கையடக்க தொலைபேசிகளை மலிவு விலையில் விற்பதாக தெரிவித்து, இணையத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை – தலகஹ பகுதியில் வைத்து தென் மாகாண கணனி வழி குற்றங்களை தடுக்கும் பிரிவால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 26 வயதான ஆண், பெண் இருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களை மாத்தறை நீதவான் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாகவும் இதன் பின்னர் குறித்த இருவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.