வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு ஆதரவான கனடா தமிழரின் நீதிக்கான நெடுநடைப்பயணம் பலன் தருமா?

333 0

பிரதமர் சேர்ஜோன் மக்டொனால்டின் சிலை உடைக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது, கனடா சட்டங்களை மதிக்கும் ஒரு நாடு, இப்படியான காழ்ப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நீதியையோ அல்லது சமத்துவத்தையோ நோக்கி எங்களால் முன்னேற முடியாது’ என்று தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதுபற்றிக் குறிப்பிட்டார். சென்ற சனிக்கிழமை மொன்றியலில் இருந்த கனடாவின் முதலாவது பிரதமரான மக்டொனால்டின் சிலை, இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது உடைத்து வீழ்த்தப்பட்டிருந்தது. முதற்குடி மக்களைப் பட்டினி போட்டார், உறைவிடப்பள்ளிகளுக்கு அனுப்பினார் என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்மீது இருந்தது. இப்படியான பொது நிகழ்ச்சிகளின் போது, அவதானமாக இருக்காவிட்டால் ஒருவர் வேண்டும் என்றே செய்யும் தவறுகளால் அதில் பங்குபற்றிய எல்லோருமே காரணமாகி விடுவார்கள். நேற்று சரியாகப்பட்டது இன்று தவறாகப் படலாம். இன்று தவறாகப்படுவது நாளை சரியாகப்படலாம். காலம் காத்திருப்தில்லை, எல்லாவற்றையும் கடந்து அது சென்றுவிடும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழ் உறவுகளுக்கு ஆதரவாக நீதி வேண்டி பிராம்டன் நகரில் இருந்து கனடா தலைநகரான ஒட்டாவா நோக்கி நடைபெறும் நீதிக்கான நெடுநடைப்பயணத்தில் சென்றவர்களுக்கு இரண்டாம் நாள் ஏஜெக்ஸ் நகரில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்லின மக்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜே தணிகாசலம் ‘எங்கள் உறவுகளுக்கு நீதி கிட்டாமல் நாங்கள் ஓயப்போவதில்லை என்பதை இங்கே கூடியிருக்கும் இந்தக்கூட்டமே எமக்கு எடுத்துக் காட்டுகின்றது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார். ரொறன்ரோ மாவட்ட கல்விச்சபை உறுப்பினர் யாழினி இராஜகுலசிங்கம் தனது உரையில் ‘நான் இங்கே பிறந்து வளர்ந்தாலும், எம்மைச் சமூகம் சார்ந்து வளர்த்தது மூலம் எமது இனத்தின் கண்ணீர் நிறைந்த வரலாற்றை எமக்குள் புகுத்தியிருக்கிறீர்கள்.’ என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் மேலும் பலர் உணர்வுபூர்வமாக உரையாற்றினார்கள்.

இந்த மாதம் செப்ரெம்பர் 15 ஆம் திகதி (15-9-2020) செவ்வாய்க்கிழமை ரொறன்ரோவில் பாடசாலைகள் ஆரம்பமாக இருப்பதால் முற்கூட்டியே பெற்றோர்கள், பிள்ளைகள், ஆசிரியர்களுக்கான கோவிட்-19 காலத்து முக்கியமாக கடமைகள் என்னென்ன, அதை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் அறிவிக்ப்பட்டிருக்கின்றது. உயர்தர வகுப்புகள் 15 ஆம் திகதியும், ஆரம்ப வகுப்புகள் 15,16,17 ஆம் திகதிகளிலும் ஆரம்பமாக இருக்கின்றன. ரொறன்ரோ மாவட்ட கல்விச்சபையில் சர்வதேச மொழித்திட்ட ஆசிரியர் என்ற வகையில் எமக்கும் கோவிட்-19 காலத்தில் சில விசேடகடமைகள் உண்டு. சுபீட்சமான எதிர் காலத்தைக் கல்விச் செல்வம்தான் நிர்ணயிக்கின்றது என்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் மிகவும் முக்கியமானதாகும், எனவே பாடசாலைகளைத் தாமதிக்காது ஆரம்பிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டி இருக்கின்றது. முக்கியமாக ஒன்ராறியோவில் உள்ள பொதுபாடசாலைகளில் சுமார் இரண்டு மில்லியன் மாணவர்களும், பெற்றோர், ஆசிரியர்களும் இதில் நேரடியாகப் பங்குபற்ற இருப்பதால் இதில் உள்ள இடர் என்ன என்பதை சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் துண்டுப்பிரசுரங்கள் எல்லோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைவிட இணைய தளங்களிலும் இது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் 190,000 ஆசிரியர்களையும், பணியாளர்களையும் கொண்ட நான்கு தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் பாதுகாப்புக் கருதி இதனால் தங்கள் அங்கத்தவர்களுக்கு ஏதாவது இடர் ஏற்படலாம் என்பதால் சிறிது தயக்கம் காட்டுகின்றன.

கனடாவில் சென்ற மார்ச் மாதம் மூடப்பட்ட பாடசாலைகள் ஆறு மாதங்களின் பின் இந்த மாதம் திறக்கப்பட இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முக்கியமான பயிற்சிப்பட்டறைகள் ஒன்லைன் மூலம் நடத்தப்பட்டன. சுமார் ஆறுமாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டுக்குள் அடைந்து கிடந்த பிள்ளைகளின் மனநிலை ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். தூங்கிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்த பிள்ளைகளைக் கற்றலுக்கு ஏற்ற சூழலுக்குத் திரும்பவும் கொண்டுவர வேண்டியிருந்ததால், பாடசாலைக்குத் திரும்புவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டன. ஒரு மாணவனோ, அல்லது மாணவியோ, அல்லது ஆசிரியர்களோ அசட்டையாக இருந்தாலே, கொரோனா வைரஸ் வேகமாக சமூகத்தில் மீண்டும் ஊடுருவிவிடலாம். அப்படி ஒன்று நடந்தால் எத்தனையோ பேரைத் தனிமைப்படுத்த வேண்டி வரலாம். அவருடன் பேருந்து வண்டியில் பயணித்தவர்கள், வகுப்பறையில் இருந்தவர்கள் மட்டுமல்ல, பிள்ளைகள் மூலம் பெற்றோருக்கு வைரஸ் தொற்றினால் அவர்கள் வேலை செய்யும் இடங்களையும் பாதுகாக்க வேண்டி வரலாம். சில சமயங்களில் இரண்டு வாரங்களுக்குக்கூட பள்ளிக்கூடத்தையே, வேலைத்தளத்தையோ மூடவேண்டி வரலாம். எனவே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் எல்லோரும் கவனமாக ஒத்துழைக்க வேண்டும். ஏற்கனவே வகுப்புகளை ஆரம்பித்த கியூபெக் மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளில் பிரெஞ்சு மொழி வகுப்புகளில் உள்ள மாணவர் இருவருக்கு கொரோனா தொற்று காணப்பட்டதால் சுமார் எண்பது மாணவர்கள் வரை தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

கொரோனா அவசர நிதி உதவித்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பாதுகாப்பாக வகுப்புக்களுக்குத் திரும்புவதற்கான நிதியத்தின் ஊடாக மாகாணங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் 2 பில்லியன் டொலர் வரை உதவி வழங்கப்படுமெனக் கனடா பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ சென்ற வாரம் அறிவித்தார். பொருளாதார நடவடிக்கைகளை நாம் மீண்டும் ஆரம்பிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பெற்றோர் வேலைக்குத் திரும்பக்கூடியதாக இருப்பதும், அதே நேரம் தங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்கிறார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதும் முக்கியமானது. முன்னாள் ஆசிரியராக, ஒரு தந்தையாக இதை நான் அறிவேன். எனவேதான் பாடசாலைகளைப் பாதுகாப்பாக மீண்டும் திறப்பது, மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர் போன்றவர்களினது உடல் நலத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றை உறுதி செய்வதற்கு மாகாணங்களும் பிராந்தியங்களும் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாகக் கனேடிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதம மந்திரி அறிவித்தார்.

தற்போதைய கோவிட் – 19 சூழலுக்கு ஏற்ப கல்வி கற்பதற்கான மேலதிக இடங்களைப் பெற்றுக் கொள்வது, காற்றுச் சுற்றோட்டத்தை மேம்படுத்துவது, கைகளைச் சுத்தப்படுத்து, சுகாதாரத்தையும் அதிகரிப்பது, தனிநபர் பாதுகாப்புக் கருவிகளையும் துப்பரவாக்கும் பொருட்களையும் கொள்வனவு செய்வது போன்ற தேவைகளுக்கு இந்த மேலதிக நிதி பயன்படத் தக்கதாக இருக்கும். இதன்படி ஒன்றாரியோ மாகாணத்திற்கு 763 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்க இருக்கின்றது. இந்தத் தொகை இரண்டு தவணை முறையில் கிடைக்க இருக்கின்றது. முதற்குடி மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு மேலதிகமாக 112 மில்லியன் டொலர் வழங்கப்படுமெனவும், அவர்களுடன் தொடர்ந்தும் அரசு பணியாற்றும் எனவும் கனடா பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.

இலங்கையில் தேர்தல் சூடு ஓரளவு தணிந்துபோக, இப்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றது. இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 59வது தேர்தலாகும். அமெரிக்காவில் பிரபலமாகாத பல சிறியகட்சிகள் இருந்தாலும், சிகப்பு நிற அடையாளத்தைக் கொண்ட ஜனநாயகக்கட்சியும், நீலநிற அடையாளத்தைக் கொண்ட குடியரசுக்கட்சியும்தான் பிரபலமாக இருக்கின்றன. லிபரேறியன், வேமொன்ட், இன்டிபென்டென்ட், றிபோம், கிறீன் போன்ற பெயர்களில் சில சிறிய கட்சிகள் இருக்கின்றன. அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் இருக்கின்றன. தொடக்கத்தில் 48 மாகாணங்கள்தான் இருந்தன. 49வது மாநிலமாக அலஸ்காவும், 50வது மாநிலமாக ஹவாய் தீவுகளும் இணைந்து கொண்டன. அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து இவை தனித்தனியே பிரிந்து இருக்கின்றன. 50 மாநிலங்களுக்கும் இருவர் வீதம் 100 செனட்சபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இரண்டு அரசியல்சபைகள் இருக்கின்றன. இதில் ஒன்று பிரதிநிதிகள் சபை, மற்றது செனட்சபை. இந்த இரண்டு சபைகளின் உறுப்பினர்களும் மக்களால் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் திகதி அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. ஒருவர் இரண்டு தடவைகள்தான் அமெரிக்க அதிபராக வரமுடியும். ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாகும். இம்முறை ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஜோ பிடென் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுகின்றார். உபஜனாதிபதிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார். உபஜனாதிபதிக்குப் போட்டியிடும் 3வது பெண்மணியான கமலா ஹாரிஸ் ஆபிரிக்கன் அமெரிக்கனாகவும், ஏசியன் அமெரிக்கனாகவும் இருப்பதால், அதிக ஆதரவு அவருக்குக் கிடைத்திருக்கிறது. இவரது தாயார் இந்தியாவைச் சேர்ந்தவர். ஜோ பிடென் ஏற்கனவே இரண்டு தடவைகள் போட்டியிட்டுத் தோல்வி கண்டாலும், உபஜனாதிபதியாக பராக் ஒபாமா காலத்தில் எட்டு வருடங்கள் இருந்திருக்கின்றார். பல ஆண்டுகள் செனட்டராகவும் இருந்திருக்கிறார். தற்போது தேர்தல் பிரசாரத்தின் போது, எல்ஜிபிரி என்று சுருக்ககமாகச் சொல்லப்படுகின்ற (டுநளடியைnஇ புயலஇ டீளைநஒரயட யனெ வுசயளெபநனெநச) மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டங்களை அறிமுகம் செய்யவிருப்பதாக இவர் தெரிவித்திருக்கிறார்.

குடியரசுக் கட்சியின் சார்பாக மீண்டும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றார். உபஜனாதிபதி பதவிக்கு மைக் பென்ஸ் போட்டியிடுகின்றார். ஜனாதிபதிக்குப் போட்டி போடுபவர் அமெரிக்காவில் பிறந்த குடிமகனாகவும், 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், தொடர்ந்து 14 வருடங்கள் அமெரிக்காவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சற்று வித்தியாசமானது. சிலர் அதைப்பற்றி எழுதும்படி கேட்டதால் சுருக்கமாகத் தருகின்றேன். ‘எலக்ரோரல் கொலிஜ்’ என்ற முறையிலான வாக்குகள் மூலமே ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகின்றார். ஒருவருக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தாலும், இறுதியில் இந்த வகையான 538 எலக்ரோல் கொலிஜ் வாக்குகள்தான் யார் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிக்கின்றன. வெற்றி பெறுபவர் குறைந்தது 270 வாக்குகளையாவது பெற்றிருக்க வேண்டும். இதில் 435 பிரதிநிதிகள், 100 செனட்டர்கள், 3 வாஷிங்டன் டிசி வாக்குகள் அடங்குகின்றன. சனத்தொகை அடிப்படையில் கலிபோர்னியா, ரெக்ஸாஸ், நியூயோர்க், புளோரிடா, இல்லிநொய்ஸ், பென்ஸில்வேர்ணியா ஆகியன அதிக வாக்குகளைக் கொண்டிருக்கின்றன. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஹிலாரி கிளிங்டன், டொனால்ட் டிரம்ப்பைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும், தேர்தல் விதிகளின் படி எலக்ரோல் கொலிஜ் வாக்குகளை அதிகம் பெற்ற டொனால்ட் டிரம்ப்தான் ஜனாதிபதியாகத் தெரிவானார். சில நிறுவனங்கள் முன்கூட்டியே எடுத்த தரவுகளின்படி இம்முறை ஜோ பிடெனுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தாலும், கடைசி நேரத்தில்கூட இந்த முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம். ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் முக்கியமான இந்த இரண்டு கட்சிகளைத் தவிர லிபரேறியன், கிறீன் கட்சிகளிலும் இருவர் போட்டியிடுகின்றார்கள். லிபரேறியன் கட்சியில் இருந்து ஒரு பெண்மணி ஜனாதிபதி பதவிக்கும், கிறீன் கட்சியில் இருந்து ஒரு பெண்மணி உபஜனாதிபதி பதவிக்கும் போட்டியிடுகின்றார்கள்.

சென்ற மாதத் தொடக்கத்தில் அதாவது ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவில் கொரோன வைரஸ் காரணமாக 4,634,985 பேர் பாதிக்கப் பட்டிருந்தார்கள்.. இவர்களில் 155,285 பேர் மரணமாகி இருந்தார்கள். இந்த வாரம் அமெரிக்காவில் கொரோன வைரஸ் காரணமாக 6,291,776 பேர் இதுவரை பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் 190,014 பேர் மரணமாகி இருக்கிறார்கள். அமெரிக்காவில் 3,547,926 பேர் இதுவரை குணமடைந்து இருக்கிறார்கள். மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் கலிபோர்ணியா, ரெக்ஸாஸ், புளோரிடா நியூயோரக் ஆகிய நான்கு மாகாணங்கள் நாலு லட்சத்தைத் தாண்டி இருக்கின்றன. ஜோர்ஜியா, இல்லிநோய், அரிசோனா ஆகிய மாகாணங்கள் 2 லட்சத்தைத் தாண்டியிருக்கின்றன. நியூஜேர்ஸி, நோத்கரோலினா, ரென்னலி, லூசியானா, பென்ஸில்வேனியா, அலபாமா, ஓகியோ, வெர்ஜினியா, மசெஸ்சுசெட், சவுத்கரோலினா, மிச்சிக்கன், மேரிலாண்ட் ஆகிய மாகாணங்களிலும் ஒரு லட்சத்திற்கு மேற்;பட்டோர் கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கனடாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக 123,873 பேர் பாதிக்கப் பட்டிருந்தார்கள். இந்த வாரம் 130,242 ஆக உயர்ந்திருக்கிறது. 9,138 மரணமடைந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 115,269 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இவர்களில் கியூபெக்கில் 62,746 பேரும், ஒன்ராறியோவில் 42,554 பேரும், அல்பேர்டாவில் 14,180 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 5,952 பேரும், சஸ்கச்சுவான் 1,624 பேரும், மனிற்ரோபாவில் 1244 பேரும், நோவாஸ்கோஷியாவில் 1,085 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 5,590,068 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஒன்ராறியோவில் 42,686 போர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 19,991 ஆண்களும், 22,392 பெண்களும் அடங்குவர். 19 வயதுக்குக் குறைந்தவர்கள் 2,856 பேராகும். 20-59 வயதுக்கு உட்பட்ட வயதினர் 26,125 பேராகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13,697 பேராகும். 2,915,347 பேர் பரிசோதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒன்ராறியோவில் 2,812 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற வியாழக்கிழமை வரை 3,933,124 ஆக அதிகரித்திருக்கின்றது. மரணமானவர்கள் தொகை 68,569 ஆக இருக்கின்றது. குணமடைந்தவர்கள் தொகை 3,032,916 ஆக இருக்கின்றது. தற்போதைய நிலையில் மகாராஷ்ட்ரா 825,739 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் முதலாவது இடத்திலும், தமிழ்நாடு 439,959 பேராக மாறி இரண்டாவது இடத்திலும், ஆந்திரபிரதேசம் 455,531 மூன்றாவது இடத்திலும், கர்நாடகா 361,341 நாலாவது இடத்திலும், உத்தரபிரதேஷ் 241,439 ஐந்தாவது இடத்திலும், டெல்கி 179,569 ஆகமாறி ஆறாவது இடத்திலும், மேற்கு வங்காளம் 168,769 ஏழாவது இடத்திலும் இருக்கின்றன.

03-09-2020 வரை உலகத்தில் மொத்தமாக 26,238,508 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தார்கள். கொரோனா வைரஸ் இதுவரை 213 நாடுகளைப் பாதித்திருக்கின்றது. உலகில் மொத்தமாக 868,422 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். 18,497,297 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிறேசில், இந்தியா, ரஸ்யா ஆகிய நாடுதள் அடங்குகின்றன. ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பெரு, கொலம்பியா, தென்னாபிரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன. மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட நாடுகளில் ஸ்பெயின், ஆஜன்ரைனா, சில்லி, ஈரான், இங்கிலாந்து, பங்களாதேஷ், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அடங்குகின்றன. இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பாகிஸ்தான், பிரான்ஸ், துருக்கி, இத்தாலி, ஜெர்மனி, ஈராக், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன. ஒரு லட்சத்தைத் தாண்டிய நாடுகளில் இந்தோனேஷியா, கனடா, உக்ரேன், இஸ்ரேல், கட்டார், பொலீவியா, ஈக்வடோர், கஸகஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. கொரோனா வைரஸ் ஆரம்பமான சீனா நாட்டில், மொத்தமாக 85,077 பேர் நோய்வாய்ப் பட்டிருக்கிறார்கள்.