நுவரெலியா போடைஸ் தோட்டத்தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு (காணொளி)

292 0

 

hatton-prostedகூட்டு உடன்படிக்கை விதியை மீறிய தோட்ட நிர்வாகத்திற்கு, எதிராக நுவரெலியா ஹட்டன் போடைஸ் தோட்டத்தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளை மீறி செயல்பட்டதாக களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் ஹட்டன் போடைஸ் தோட்ட தொழிலாளர்கள், அத்தோட்டத்தில் தேயிலை தூள் பொதிகளை கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லவவதை இன்று காலை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் அத்தோட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கும் எதிர்ப்பு காட்டியுள்ளனர்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு மாத காலம் மேலாகியும் அக் கூட்டு ஒப்பந்தத்தில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளுக்கு அப்பால், போடைஸ் தோட்ட நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக மாறுப்பட்ட தொழில் விதி முறைகள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் “நோம்” பெயர் அடிப்படையில் பறிக்கப்பட வேண்டிய கொழுந்தினை அதற்கும் அதிகமாக பறிக்கும் படி போடைஸ் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை வற்புறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவை அனைத்திற்கும் எதிர்ப்பினை தெரிவித்த தொழிலாளர்கள், கொடுக்கப்படும் கொடுப்பனவுகளை முறையாக கொடுக்காத பட்சத்தில், தொழிலாளர்களால் பறிக்கப்பட்டு தேயிலை தூள் உற்பத்தி செய்து கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் தேயிலை தூள் பொதிகளை தொழிற்சாலையிலிருந்து கொண்டு செல்லப்பட வேண்டாம் எனவும் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திடம் வழியுறுத்தியுள்ளனர்.

இதனை மீறி போடைஸ் தோட்ட நிர்வாகம் தேயிலை தூள் பொதிகளை கொழும்புக்கு ஏற்றிச்செல்ல முற்பட்டவேளை, விடயம் அறிந்த தொழிலாளர்கள் வாகனத்தை இடைமறித்து நிறுத்தியுள்ளனர்.இவ்விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவனத்திற்கு கொண்டு சென்ற தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பாமல் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மற்றும் மகளிர் பிரிவு இணைப்பாளர் அருள்நாயகி உள்ளிட்ட காங்கிரஸின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் தோட்ட தொழிலாளர்களுடனும்,நிர்வாகத்தினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இதன்போது தேயிலை பொதிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தை தோட்ட தொழிற்சாலையில் பாதுகாப்பாக நிறுத்தும்படியும், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டியதன் பின் இத்தேயிலை பொதிகளை கொழும்புக்கு ஏற்றிச்செல்ல வேண்டும் எனவும் அவர்களால் வழியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதேவேளை கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் செயற்படாத அனைத்து தோட்டங்களிலும், இவ்வாறான முறுகல் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது