18 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 19-வது மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று செல்கிறார்.
தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக நேரில் சென்று ஆய்வு செய்து, கொரோனா தடுப்பு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார். கலெக்டர்களுடன் ஆலோசனை செய்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்கிறார். இதுவரை 18 மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், 19-வது மாவட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) செல்கிறார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
அதனை தொடர்ந்து மகளிர் சுயஉதவி குழுக்கள், தொழில் முனைவோர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.
அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வைத்து, பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார். இதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை குறித்தும், ஆய்வு கூட்டம் குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தை தொடர்ந்து, 11-ந் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.

