துபாயில் வேலை செய்த கிர்கிஸ்தான் தொழிலாளி, மேலாளரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள அல் குவாஸ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த 21 வயது வாலிபர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் அவர் தாய் நாட்டிற்கு செல்வதற்காக தனக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று கம்பெனி மேலாளரிடம் கேட்டுள்ளார். அவர் விடுப்பு வழங்காமல் திட்டி அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி, மற்ற ஊழியர்கள் வெளியே சென்ற சமயத்தில் தனியாக இருந்த மேலாளரை கத்தியால் கழுத்தை அறுத்தும் சுத்தியலால் தாக்கியும் கொலை செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற அவர் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து நாடு திரும்ப முயற்சித்துள்ளார். ஆனால் விமானம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை. அதேசமயம் போலீசார் தேடியதால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. மறுநாள் தனது நாட்டின் தூதரகத்திற்கு சென்று, நாடு திரும்ப உதவி செய்யும்படி கூறியிருக்கிறார். ஆனால் எந்த விவரத்தையும் கூறாததால் அவருக்கான அனுமதியை தூதரகம் நிறுத்தி வைத்திருந்தது.
அங்கிருந்து வெளியே வந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது துபாய் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, திட்டமிட்டு மேலாளரை கொலை செய்ததாக தொழிலாளி மீது அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

