சிறிலங்காவில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கான பத்திரம் இவ்வாரம் அமைச்சரவையில் முன்வைப்பு

348 0

சிறிலங்காவில் 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் சட்டமூலத்திற்கான பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், செப்டம்பரில் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் இறுதிக்குள் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தியுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் பிரயத்தனப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நீதியமைச்சர் அலி சப்ரி இதுகுறித்த சட்டமூலத்திற்கான பத்திரத்தை இவ்வாரம் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார்.

இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள நல்ல சரத்துக்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவும் தமது பரிந்துரைகளை இவ்வாரம் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.