சிறிலங்காவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களாக மாறும் சிறுவர்கள்- லக்நாத்

392 0

சிறிலங்காவில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் பெரும்பாலான சிறுவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை  தலைவர்,  விசேட வைத்தியர் லக்நாத் வெலகெதர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆறு மாதங்களில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 52,000 பேரில் கணிசமானவர்கள் பள்ளி வயது குழந்தைகள் ஆவர்.

அதாவது, கொரோனா  வைரஸ் தொற்றில் இருந்து நாட்டை விடுவிப்பதில் தலைமை பாதுகாப்பு அதிகாரியும் சுகாதார சேவைகளும் மிகச் சிறந்த பணிகளை முன்னெடுத்துள்ளன.

ஆனால் நீண்டகாலமாக போதைப்பொருள் அச்சுறுத்தலில்  உள்ள நாட்டை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

போரின்போது இறந்த வீரர்களின் எண்ணிக்கை தினசரி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதைப் போலவே, தினசரி அடிப்படையில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களின் எண்ணிக்கையும் இன்று ஊடகங்களில் வெளியிடப்படுகிறது.

அதாவது,கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் போதைப்பொருள் வியாபாரத்திற்காக 52,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஹெரோயினுக்கு 24,000 பேரும் கஞ்சாவுக்கு 26,000 பேரும் அடங்குவர்.

அவர்களில் பெரும்பாலோர் 25-  30 வயதிற்குட்பட்டவர்கள். இதில் சுமார் 20 சதவீதம் பேர் பள்ளி வயது குழந்தைகள்.

சோகமான செய்தி என்னவென்றால், இதுபோன்ற இரண்டாவது கைது நடவடிக்கைகள்  மத்திய மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில் பள்ளி குழந்தைகளை கைது செய்து,  தடுப்பு காவலில் வைப்பது பொருத்தமானதல்ல.

அதாவது, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டால், அங்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் போதைப்பொருள் விற்பனையாளர்களாக மாறுவார்கள்.

இந்த முறையில் கைது செய்யப்பட்ட குழந்தைகள்,சிறந்த குடும்ப பின்னணி மற்றும் சிறந்த கல்வியைக் கொண்டவர்களாகவும் சிலர் உள்ளனர்.

பாதுகாப்புப் படையினரால் மட்டுமே போதைப்பொருளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே, இவைகள் தொடர்பாக கல்வி  ஊடாக குழந்தைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அரசாங்கம், கல்வித்துறை மற்றும் பொது மக்கள் என அனைவரும் இவ்விடயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.