வள்ளுவத்தின் வழி நின்று வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவோம்! – ம.செந்தமிழ்!

70 0

k1024_maveerar-varam-wiederhergestellt-1இரண்டாயிரம் வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் குன்றா இளமையுடன் அள்ள அள்ள குறையாத அறிவுச் சுரங்கமாக விளங்கிவரும் உலகப் பொது மறையான திருக்குறள் தந்த வள்ளுவப் பெருந்தகை வகுத்த வள்ளுவத்தின் வழி நின்று எமது வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவது உலகத் தமிழர்களின் கடமையாகும்.

முக்காலத்திற்கும் பொருந்தும் இயல்புடைய தமிழ்மறையான திருக்குறள் இன்றைய நிலையில் உலகத் தமிழர்களுக்கு அவர்களது கடமையை உணர்த்தி நிற்கின்றது.

தமிழ் மறையில் பதினோராவது அதிகாரமாக இடம்பெற்றிருக்கும் ‘செய்ந்நன்றி அறிதல்’ பகுதியில் கூறப்பட்டிருக்கும் பத்து குறள்களுக்குள்ளும் பொதிந்துள்ள விடயங்களை உலகத் தமிழர்களின் கடமையின் வழியே பார்ப்போம்.

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது” (குறள்-101)

குறள் விளக்கம் : தனக்கு ஓர் உதவியும் செய்யாதிருக்கும் போது ஒருவன் பிறர்க்குச் செய்த உதவிக்கு இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒப்பாதல் இயலாது.

பொது விளக்கம் : சுதந்திர தமிழீழம் என்ற இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈர்ந்த மாவீரர்கள் எம் இனத்தில் பிறந்தார்கள் என்பதற்கும் அப்பால் தமிழினத்தின் சார்பில் எதுவித உதவியையும் பெறாதவர்களே. அவ்வாறு இருக்கையில் உலகத் தமிழினத்தின் சுதந்திர வாழ்விற்காய் தமது ஆசைகளை விடுத்து, பற்றறுத்து, பாச உறவுகளைத் துறந்து, சுயவாழ்வின் சுகபோகங்களை கைவிட்டு தன்னலமற்று விடுதலை வேள்வியில் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்களின் தியாகத்திற்கு ஈடு இணையே கிடையாது.

“காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது” (குறள்-102)

குறள் விளக்கம் : தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரியதாகும்.

பொது விளக்கம் : உலகம் வியந்து பார்க்கும் வண்ணம் செல்வச்செழிப்போடு சீரும் சிறப்புமாக தம்மைத் தாமே ஆளும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் எமது முந்தைத் தமிழர் அரசமைத்து வாழ்ந்துவந்த நிலையில் அந்நியர் ஆதிக்கத்தில் எம் இனத்தின் இறையாண்மை பறிபோனது.

இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானிய ஏகாதிபத்தியம் விலகி சிங்களவர் கைகளில் ஆட்சி அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டபோது இனரீதியான ஒடுக்குமுறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக தமிழர்கள் அவதிப்பட்ட தருணத்தில்தான் பறிக்கப்பட்ட தமிழர்களது தன்னுரிமையினை மீட்பதற்கான தமிழீழ விடுதலைப் போராட்டம் வரலாற்றுத் தன்னியல்பில் தோற்றம்பெற்றது.

தமிழினத்தின் அடிமை விலங்குடைக்கும் வரலாற்றுப் பணியில் தமது உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் தாமாகவே முன்வந்து உவந்தளித்த மாவீரர்களின் தற்கொடை வீரமே உலகளவில் தமிழர்களுக்கான தலைநிமிர்வினை தந்திருந்தது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் இன அழிப்பு முன்னெடுப்புக்களை மாவீரர்கள் தமது தற்கொடை வீரத்தால் வேலியமைத்து தடுத்து நிறுத்தாது விட்டிருப்பின் எமது தனித்துவத்தை இழந்து சிங்கள தேசத்தின் அடிமை இனமாகியிருந்திருப்போம்.

ஆகவே, தக்க தருணத்தில் தாமாக முன்வந்து தமது தற்கொடையால் உயிர்வேலி அமைத்து எம் இனத்தைக் காத்து நின்ற/நிற்கின்ற காவல்தெய்வங்களின் தியாகம் உலகத்தைவிட மிகப்பெரியதாகும்.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது” (குறள்-103)

குறள் விளக்கம் : பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலினும் மிகப் பெரியதாகும்.

பொது விளக்கம் : கோயிலுக்கோ, பாடசாலைக்கோ, சனசமூக நிலையத்திற்கோ அன்பளிப்பாக ஒரு மின்குமிழை வாங்கிக்கொடுப்பவர் கூட அதில் ‘உபயம்-…………..’ என்று தனது பெயர் பொறித்தே வழங்குகிறார். சாதாரண மின்குமிழை கொடுப்பவரே தனது அன்பளிப்பிற்கான விளம்பரத்துடனேயே செய்யும் போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரகாவியமான நாற்பதாயிரத்திற்கும் மேலான மாவீரர்கள் தமக்கோ அல்லது தம் சார்ந்தவர்களுக்கோ எதுவித பிரதிபலனையும் எதிர்பார்க்காது இனம் சார் நலனை முன்னிறுத்தி செய்த தியாகம் மகத்துவமானது.

தமிழினத்தின் மீது மாவீரர்கள் கொண்டிருந்த பற்று, பாசம், அன்பு, அக்கறை என்பன அடி முடி காணவியலாத அருட்பெரும் சோதியை மிஞ்சியதாகும்.

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்” (குறள்-104)

குறள் விளக்கம் : ஒருவன் தினையளவுள்ள சிறிய உதவியைத் தமக்குச் செய்தாலும் அதன் பயன் உணர்ந்த சான்றோர் அதனைப் பனையளவு பெரிதாக மதித்துப் போற்றுவர்.

பொது விளக்கம் : திணையளவுள்ள உதவியையே பனையளவாக மதித்துப் போற்றும் போது திரும்பக் கிடைக்கவே கிடைக்காதென்று தெரிந்த நிலையிலும் தமது இன்னுயிரை எமக்காக ஆகுதியாக்கிய மாவீரர்களின் தியாகத்தை உடல்விட்டு உயிர் பிரியும் வரை போற்றுவது எம்மை சான்றோர் நிலைக்கு இட்டுச்செல்லும்.

“உதவி வரைத்துஅன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து” (குறள்-105)

குறள் விளக்கம் : கைமாற்றாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று. உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

பொது விளக்கம் : நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்திற்காக தமது சுவாசத்தையே நிறுத்திய புனிதர்களது தியாகத்திற்கு இணையாக நாமும் பதிலுக்கு தியாகம் செய்யவேண்டியதில்லை. அவ் உன்னத தியாகத்திற்கு கடமைப்பட்டவர்களாக எம்மை கருதிக்கொள்ளும் மனவியல்பின் வழியே நாம் அவர்களின் தியாகத்தை போற்றும் பண்பாளர்களாக இருத்தல் அவசியமாகும்.

“மறவற்க மாசுஅற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்புஆயர் நட்பு” (குறள்-106)

குறள் விளக்கம் : குற்றமற்ற நல்லவரின் நட்பை மறத்தல் கூடாது. துன்பம் நேர்ந்த காலத்தில் தனக்கு உதவியாக இருந்தவர்களின் நட்பை எந்நாளும் கைவிடுதல் கூடாது.

பொது விளக்கம் : எமது இனம் அடிமை இருள் சூழந்து அவதிப்பட்டுவந்த வேளை தம்முயிர்த் தியாகத்தால் ஒளியேற்றி இருளகற்றிய உத்தமர்களை எத்தருணத்திலும் நாம் மறத்தல் கூடாது.

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு” (குறள்-107)

குறள் விளக்கம் : தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் மறவாது நினைத்து போற்றுவர் பெரியோர்.

பொது விளக்கம் : சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனவெறியாட்டத்திற்குள் நாம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தவேளை தமது உயிரைப் பணயம் வைத்து எமது வாழ்வை மீட்டுத்தந்த மான மறவர்களை ஏழேழ் பிறவிகளிலும் மறவாது நினைத்துப் போற்றுவோம்.

“நன்றி மறப்பது நன்றுஅன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று” (குறள்-108)

குறள் விளக்கம் : பிறர் செய்த நன்மையை மறப்பது அறமாகாது. அவர் செய்த தீமையை உடனே மறந்து விடுவதே அறமாகும்.

பொது விளக்கம் : எமது நல் வாழ்விற்காகவும் வருங்கால சந்ததியின் நலனுக்காகவும் தமது மானுட வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்களை மறப்பது அறமாகாது. அதேபோல் விடுதலைப் போராட்டத்தின்பால் நிகழ்ந்த தவறுகளை உடன் மறந்து விடுவதே அறமாகும்.

“கொண்றுஅன்னா இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்” (குறள்-109)

குறள் விளக்கம் : முன்பு உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும் அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்தால் அத்துன்பம் மறைந்து போகும்.

பொது விளக்கம் : ஒருவர் கொலை செய்தவராயினும் அதற்கு முன் அவர் செய்த நண்மைகளை நினைத்தால் அத்துன்பம் மறைந்து போகுமெனும் போது இன விடுதலைக்கான போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உயிர்த்தியாகங்களை எண்ணி அதன்பால் நிகழ்ந்த தவறுகளையும் பிழைகளையும் மறப்போம்.

தமிழின விடுதலை நோக்கிய போராட்ட வரலாறானது முழுக்க முழுக்க இனிமையான நிகழ்வுகளால் கட்டியெழுப்பப்பட்டிருக்க வில்லை. நெல் பயிர்கள் முழுமையான விளைச்சலைக் கொடுக்க வேண்டுமென்பதற்காக அதற்குச் செல்லும் ஊட்டங்களை உறிஞ்சும் களைகளை அகற்றுவது போன்று எமது விடுதலைப் போராட்ட வழித்தடத்திலும் களையெடுப்புகள் நடந்துள்ளது.

அவ்வாறு நடந்த களையெடுப்படுகளாகட்டும் தவறுகள், பிழைகளாகட்டும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தனிப்பட்ட வெறுப்பின்பாற்பட்டு நடந்தவை கிடையாது. இன விடுதலை என்ற உன்னத இலட்சியத்தின்பாற்பட்டே அவை நடந்தேறியது. இவ்வாறான துன்பத்திற்குள்ளானோர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினால் கிட்டியிருக்கும் நண்மைகளை எண்ணி தொடர்ந்து ஆதரளிப்பதன் மூலம் போற்றுதலுக்குரியவர்களாவீர்கள்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வு இல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள்-110)

குறள் விளக்கம் : எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு. ஆனால் ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உயர்வே கிடையாது.

பொது விளக்கம் : அறத்தை அழித்தவர்களே பிராயச்சித்ததின் மூலம் தப்பிப் பிழைக்க முடிகின்ற போது செய்ந்நன்றி மறந்தவர்களுக்கு உயர்வில்லை என்பதிலிருந்தே அதன் மகத்துவத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

உலகத் தமிழர் ஒவ்வொருவரும் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களே. உலகின் எந்த மூலையில் தன்னும் புதிதாய்ப் பிறக்கும் பிறக்கப்போகும் தமிழ் குழந்தைகள் கூட மாவீரர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாகவே இருப்பார்கள்.

அந்தவகையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்பால் நிகழ்த்தப்பட்டிருக்கும் உயிர்த்தியாகமானது தலைமுறைகள் கடந்தும் தலைநிமிர்வை கொடுக்கும் பேராற்றல் கொண்டதாகும்.

தேசக் கனவு சுமந்து வீரமரணமடைந்த சரித்திர நாயகர்களை போற்றிப் பூசிக்கும் வீர மரபானது வெறுமனே வழிபாட்டுடன் முடிந்துபோய்விடுவதில்லை. மாறாக விடுதலை நோக்கிய பாதையில் எம்மை உறுதிகுலையாது முன்னகர்த்திச் செல்லும் உந்துவிசையாகும்.

அதனை நன்குணர்ந்தே சிங்கள அரசுகள் மாவீரர்களை நினைவேந்த விடாது தடுத்து வருகின்றது. எமது தேசத்தின் தேகமெங்கும் மாவீரர்களது வித்துடல்களால் நிறைந்து விடுதலை வயல்களாகத் திகழ்ந்த மாவீரர் துயிலுமில்லங்கள் உழுதெறியப்பட்டமையும் அதனால்தான்.

தாயகக் கனவு சுமந்து வீரச்சாவடைந்த நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களும் அவர்களோடு தோளோடு தோள் நின்று சாவடைந்த பொது மக்களும், எமது தாயகத்து மண்ணோடு மண்ணாகவும், கடலோடு கடலாகவும், காற்றோடு காற்றாகவும், வானோடு வானாகவும் இரண்டறக்கலந்து எம்முடனே உள்ளார்கள். அவர்களின் நினைவாக மலர்தூவி சுடரேற்றி வீரவணக்கம் செய்வோம்.

எமது சுதந்திர வாழ்விற்காய் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் செய்யும் உரிமையைக் கூட மறுக்கும் சிங்களம் ஒருபோதும் தமிழருக்கு நீதியை வழங்கப் போவதில்லை. ஆகவே மாவீரர்கள் கண்ட கனவினை தோள்களில் சுமந்து அவர்கள் காட்டிய பாதையில் தேசியத் தலைவர் வழிநடத்தலில் இலட்சியத்தை அடைவோமென் இன்நாளில் உறுதியேற்போம்.

‘நாம் ஒரு சத்திய இலட்சியத்தில் பற்றுக் கொண்டு, உறுதி கொண்ட மக்களாக ஒன்று திரண்டு நின்றால் எந்தவொரு சக்தியாலும் எம்மை அசைக்கவே முடியாது. வீரசுதந்திரம் வேண்டி நிற்கும் மக்களுக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்.’ என்ற தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைப்படி வள்ளுவத்தின் வழிநின்று வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவோம்.

வாருங்கள் தமிழர்களே தமிழீழம் காண்போம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’